Published : 04 Nov 2013 09:31 AM
Last Updated : 04 Nov 2013 09:31 AM
இலங்கையில் நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்க முடியாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமன்வெல்த் மாநாட்டில், பிரதமருக்கு பதில் குடியரசு துணைத் தலைவரை பங்கேற்க வைக்கலாமா என்றும் அந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிதம்பரம் ஆலோசனை...
தி.மு.க. தலைவர் கருணா நிதியை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தீபாவளியன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை தவிர்க்க முடியாதென்று கருணாநிதிக்கு எடுத்துரைக்கப் பட்டதாகவும் கருணாநிதியை சமாதானப்படுத்த சில யோசனைகளை சிதம்பரம் முன்வைத்ததாகவும் தெரிகிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் பங்கேற்பதென காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு எட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் உணர்வு...
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திமுக தலைவர் கருணாநிதியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "காமன்வெல்த் மாநாடு குறித்த கருணாநிதியின் கோரிக்கை, தமிழக மக்களின் உணர்வுகள், நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் பிரதமரின் பங்கேற்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக வந்த செய்திகள் தவறானவை. விவாதம் நடக்கிறது, ஆனால் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று சிதம்பரம் தெரிவித்தார்.
சர்வதேச நட்புணர்வு...
இதற்கிடையில், திமுக, காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறியதாவது: காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு, 24 ஆண்டுகளுக்கு பின், தற்போதுதான் ஆசிய கண்டத்தில் நடக்கிறது. எனவே, இதில் இந்திய பிரதமர் பங்கேற்காவிட்டால், சர்வதேச அளவில் இந்திய அரசியல் கொள்கை குறித்த கேள்வி எழும். மேலும் சர்வதேச நாடுகளிடையேயான நட்புறவில் முரண்பாடுகள் ஏற்படும், இந்தியா பங்கேற்காததை அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் வேறுவிதமாக திசை திருப்பக் கூடும் என மத்திய அரசு தரப்பிலிருந்து சிதம்பரம் மூலமாக கருத்துகள் அனுப்பப்பட்டதாம்.
திமுக பிடிவாதம்...
திமுக தரப்பில் முடிந்த வரை காமன்வெல்த் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறியதாகவும், மாற்று ஏற்பாடாக பிரதமருக்குப் பதில் வேறு யாரையாவது அனுப்பலாம் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. மற்ற தேசிய கட்சிகளான பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை திமுக தலைமைக்கு காங்கிரஸ் சுட்டிக்காட்டியதாம்.
திமுகவுக்கு காங். ஆதரவு...
ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு காங்கிரசின் ஆதரவு முறைப்படி மேலிடத்திலிருந்து அறிவிக்கப்படும் என்று கருணாநிதி - சிதம்பரம் சந்திப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT