Published : 18 Oct 2013 09:45 PM
Last Updated : 18 Oct 2013 09:45 PM
“இன்று நம்முடைய ரூபாய் ஐ.சி.யூ.வில் இருக்கிறது. தமிழ் மக்கள் இவரை (ப.சிதம்பரம்) ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை” என்றார் மோடி.
இந்தியப் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று சில யோசனைகளைத் தெரிவித்த அவர், “டெரரிஸம் (தீவிரவாதம்) மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். ஆனால், டூரிசம் (சுற்றுலா) மக்களிடம் பிணைப்பை ஏற்படுத்தும். குறைந்த முதலீட்டில், பொருளாதார வளர்ச்சியைக் காண, நம் நாடு சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்” என்றார்.
உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் விரவியுள்ளதாகக் குறிப்பிட்டவர், “வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு மிகுந்த வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். அவர்கள் நம் தூதர்களாகவே செயலாற்றுகிறார்கள். நம் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களைப் பயன்படுத்துவதோடு, அவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டியது ஓர் அரசின் கடமை” என்று கூறினார்.
டெல்லி மட்டுமே இந்தியா அல்ல!
நாட்டின் அரசு அதிகார மையம், டெல்லியில் மட்டுமே இருப்பதாக குறைகூறிய மோடி, “இந்தியா என்பது டெல்லி மட்டுமே அல்ல என்பதை உலகுக்குச் சொல்ல வேண்டும். அதையொட்டியே வெளியுறவுக் கொள்கைகள் இருக்க வேண்டும்.
சர்வதேச மாநாடுகள், சர்வதேசத் தலைவர்கள் சந்திப்பு அனைத்தையுமே டெல்லியில் நிகழ்த்துவது சரியல்ல. அதுபோன்ற சர்வதேச சந்திப்புகளை எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் நிகழ்த்திட வேண்டும்” என்றார்.
மத்திய நிதியமைச்சரைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சரை நையாண்டி செய்த நரேந்திர மோடி, “நம் வெளியுறவு அமைச்சர், சீனாவுக்குச் சென்று, தான் பெய்ஜிங்கில் இருக்க விரும்புவதாகக் கூறுகிறார்.... அதுபோன்றவர்கள் பெய்ஜிங்கிலேயே இருக்கட்டும் என்பதே எனது விருப்பம்” என்றார் மோடி.
முடிவில், “அடுத்த நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு. அந்த அளவுக்கு வலுவான இந்தியாவை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றார் அவர்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
இலங்கையில் வாழும் தமிழர்களைப் பாதுகாப்பது இந்தியாவின் கடமை என்று குறிப்பிட்ட மோடி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT