Published : 20 Nov 2013 07:37 PM
Last Updated : 20 Nov 2013 07:37 PM
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'ஹெலன்' புயல் காரணமாக, வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் ஓங்கோலுக்கும் இடையே நாளை (வியாழக்கிழமை) இரவு கரையை கடக்கிறது.
ஹெலன் புயலையொட்டி, ஆந்திர மாநிலத்தில் துரித நிலையில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், மேற்கு மத்திய வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறியது. அது மேலும் தீவிரமடைந்து இன்று காலை காலை 8.30 மணிக்கு புயலாக மாறியது.
'ஹெலன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று முற்பகல் 11.30 மணிக்கு, சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 470 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 290 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டிருந்தது.
இன்னும் 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறி, முதலில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும். பின்னர், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் ஆந்திர கரையை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் ஓங்கோலுக்கும் இடையே வியாழக்கிழமை இரவு கடக்கும்.
தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை:
ஹெலன் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை. எனினும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கன மழையோ, மிக பலத்த மழையோ பெய்யக் கூடும்.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:
ஹெலன் புயல் காரணமாக மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலமான கடல் காற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உஷார் நிலையில் ஆந்திரம்:
புயல் மற்றும் கன மழைக்கு நெல்லூர், பிரகாஷன், குண்டூர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருப்பதால், இம்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 6 குழுக்குள் ஆந்திரம் விரைந்துள்ளது.
இந்தப் புயலால் ஒடிசாவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹெலன் பெயர்க் காரணம்:
புயல் உருவாகும்போது அதற்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 தெற்காசிய நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.
'ஹெலன்' என்ற பெயர், வங்கதேசம் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரிசாவை தாக்கிய பைலின் புயல், தாய்லாந்து பரிந்துரைத்த பெயராகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT