Published : 29 Oct 2014 10:45 AM
Last Updated : 29 Oct 2014 10:45 AM
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நாளை மறுநாளுக்குள் சகாயம் தலைமையில் குழுவை அமைத்து, கனிம ஊழல் பற்றி விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசை நீதிமன்றம் தண்டித்துள்ள நிலையில், பொதுமக்களும் தண்டிப்பார்கள் என்பது உறுதியாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை செயல்படுத்தத் தவறியதற்காக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
தமிழக அரசை உயர்நீதிமன்றம் கண்டித்திருப்பதோ, அபராதம் விதித்திருப்பதோ எந்த வகையிலும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ தரவில்லை. ஏனெனில், தமிழகத்தின் மிகப்பெரிய ஊழலாக உருவெடுக்க இருக்கும் இம்முறைகேடுகள் குறித்து விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, உண்மைகளை மறைப்பதிலும், ஊழல்வாதிகளை காப்பாற்றுவதிலும் தான் தீவிரம் காட்டியது. கனிம ஊழல் குறித்து விசாரிக்க அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகும் சகாயம் குழு விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதற்கு மாறாக முட்டுக்கட்டைகளைத் தான் போட்டது.
தமிழக அரசின் இப்போக்கைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், "ஊழல் செய்ததற்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிழலாக ஆட்சி செய்யும் புதிய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்னொரு ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்யக் கூடாது. சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி சகாயம் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றம் மட்டுமின்றி மக்களும் ஆட்சியாளர்களுக்கு சரியான தண்டனை வழங்குவர்" என்று எச்சரித்திருந்தேன். அதேபோல் தான் நீதிமன்றம் இப்போது கண்டனம் தெரிவித்திருக்கிறது.
கிரானைட் ஊழலும், தாதுமணல் ஊழலும் புதிதாக நடைபெற்ற ஊழல் அல்ல; பல ஆண்டுகளாகவே இந்த ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியின் போது, எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ஜெயலலிதா, மேலூர் பகுதியில் நடைபெறும் கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் கிரானைட் ஊழலை முன்வைத்தே தென்மாவட்டங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற எஸ்.பி. வேலுமணி, கிரானைட் ஊழல் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதுடன், அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால், இருவருமே அவர்கள் வகித்து வந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது தான் நடந்ததே தவிர, கிரானைட் கொள்ளையர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேபோல் தாது மணல் ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்த போதிலும், இன்றுவரை அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியிடப்படவில்லை. அக்குழு விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தயாரித்து விட்ட போதிலும், அதை பெற்றுக் கொள்ள அரசு முன்வரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தாது மணல் கொள்ளைக்கு காரணமானவர் என்று கருதப்படுபவர் ஆளுங்கட்சி தொலைக்காட்சியின் பங்குதாரராக இருப்பதால் அவரை காப்பாற்றுவதற்காகவே விசாரணைக்குத் தடை போடப்படுவதாக தெரிகிறது. இதை நீதித்துறை உணர்ந்திருப்பதால் தான் இவ்வளவு கடுமையான ஆணையை பிறப்பித்துள்ளது.
ஏதேனும் ஓர் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாற்று எழுந்தால், உடனடியாக அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது தான் அரசுக்கு அழகாகும். ஆனால், தனிநபர்களுக்கு ஆதரவாக ஊழலை மூடி மறைக்க அரசு முயல்வது புதுமையாக உள்ளது. ஒருவேளை, முதல்வரும், அமைச்சர்களும் அடிக்கடி கூறுவதைப் போல இதுதான் ஜெயலலிதா வழியில் நடக்கும் ஆட்சி என்பதற்கு உதாரணமா? என்பதும் தெரியவில்லை.
ஊழலுக்கு ஆதரவாக செயல்படும் போக்கை இப்போதாவது அரசு கைவிட்டு, ஊழல் செய்து இயற்கை வளங்களை கொள்ளையடிப்போர் மீது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
அதன் முதல்கட்டமாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நாளை மறுநாளுக்குள் சகாயம் தலைமையில் குழுவை அமைத்து, கனிம ஊழல் பற்றி விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் ஏற்கனவே கூறியவாறு, இப்போது தமிழக அரசை நீதிமன்றம் தண்டித்துள்ள நிலையில், வெகுவிரைவில் பொதுமக்களும் தண்டிப்பார்கள் என்பது உறுதியாகும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT