Published : 27 Nov 2013 01:12 PM
Last Updated : 27 Nov 2013 01:12 PM

ஏற்காடு தேர்தலில் வாக்குக்குப் பணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், பணத்தை வாரி இறைத்து வருகின்றன என்றும், வாக்காளர்களுக்கு பணம் தருபவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டுசெல்லபட்டபோது பிடிபட்ட தொகை மட்டும் ரூ.60.10 கோடி என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இது, அப்போது நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட மொத்த தொகையான ரூ.74.27 கோடியில் 80 சதவீதம் ஆகும். கைப்பற்றப்பட்ட பணமே இவ்வளவு என்றால், இதைவிட பத்து மடங்கிற்கும் அதிகமான தொகை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடும்.

அதேபோல், இப்போது நடைபெறும் ஏற்காடு இடைத்தேர்தலிலும் போட்டியிடும் கட்சிகள் பணத்தை வாரி இறைத்து வருகின்றன.

ஏற்காடு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது முதல் இன்று வரை, ரூ.8.6 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஏற்காடு தொகுதியுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

எத்தனையோ தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் தேர்தல் ஆணையம் பண பலத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. இந்த அளவுக்குத்தான் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளன.

தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களை எச்சரிப்பது, கண்டித்து விட்டு விடுவது, வழக்குப்பதிவு செய்துவிட்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது என்பன போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளை எடுப்பதுடன் நின்று விடக்கூடாது.

ஓட்டுக்கு பணம் தருபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை தேர்தல் ஆணையம் பெற்றுத்தர வேண்டும். அப்போது தான் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x