Published : 26 Oct 2014 01:09 PM
Last Updated : 26 Oct 2014 01:09 PM

தமிழகம் முழுவதும் நவ.3-ல் திமுக ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு: கருணாநிதி அறிவிப்பு

பால் விற்பனை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறுவதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவித் தொகையினை வழங்கிட வலியுறுத்தி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நவம்பர் 3-ல் "ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு" நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஏழை எளிய நடுத்தர

குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் வரலாறு காணாத விதமாக பால் விலையை லிட்டருக்குப் 10 ரூபாய் உயர்த்தியுள்ளது.

அத்துடன், மின்வெட்டு குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை விடும் அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்து மக்கள் கருத்துக் கேட்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளது.

மேலும், கடந்த பல நாட்களாகப் பெய்து வரும் பெரு மழையில் விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலும், அரசின் சார்பில் எவ்வித நிவாரணங்களும் இது வரை அறிவிக்கப்படவில்லை.

தமிழக அதிமுக அரசின் தொடர்ந்த மக்கள் விரோதப்போக்கினை கண்டிக்கும் வகையிலும், பால் விற்பனை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறுவதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக போதிய நிவாரண உதவித் தொகையினை வழங்கிட வேண்டுமென்று வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வரும் 3-11-2014 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் "ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு" நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டில் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x