Published : 23 Nov 2013 03:38 PM
Last Updated : 23 Nov 2013 03:38 PM

கோமாரி நோயை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

கால்நடைகளுக்குப் பரவும் கோமாரி நோயைத் தடுக்கக் கோரியும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், ம.தி.மு.க. விவசாய அணி சார்பில் வருகிற 29- ஆம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும் என்ற மொழி, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வில் உண்மை ஆகி வருகிறது. பருவ மழை பொய்த்ததால், கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மைத் தொழிலில் நட்டம் ஏற்பட்டு, வேதனையின் விளிம்பில் இருக்கும் விவசாயிகளைக் காப்பாற்றி வந்தது கால்நடைகள்தாம்.

தமிழ்நாட்டு விவசாயக் குடும்பங்களில், கால்நடை வளர்ப்பு என்பது, வாழ்வோடு இரண்டறக் கலந்தது ஆகும். விவசாயிகளை வாழ வைத்த கால்நடைகள் இன்று, அவர்களின் கண்ணீருக்கும், ஆற்ற முடியாத பெருந்துயரத்திற்கும் ஆளாக்கி விட்டன.

கடந்த ஒரு மாத காலமாக, தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கோமாரி நோயால், கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மேற்கு மாவட்டங்களிலும், காவிரி டெல்டா உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் கோமாரி நோயின் தாக்குதலால் மடிந்து இருக்கின்றன. இந்த நோயின் அறிகுறி தென்பட்ட உடனேயே விவசாயிகள், கால்நடை மருந்தகங்களை அணுகியபோது, போதிய தடுப்பு ஊசி மருந்துகள்இல்லை என்று அலட்சியமாக இருந்துள்ளனர். விவசாயிகளின் துயரத்தைச் செவிமடுக்கத் தயாராக இல்லாத கால்நடைத்துறை, இப்போது கோமாரி நோயால் இறந்த கால்நடைகளின் கணக்கைக் குறைத்துக் காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றது.

கோமாரி நோயால் பாதிக்கப்படும் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு முன்கூட்டியே உரிய தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருந்தால், இவ்வளவு பெரிய பாதிப்புகள் இராது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வாய்ப்புண் ஏற்படுவதால், உணவு எடுத்துக் கொள்ள முடியாமல், பட்டினி கிடந்து சாகின்றன.

தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம்முகாம்களை, நோய் பாதிப்புக்குள்ளாக பகுதிகளில், ஊராட்சி மட்டங்களில் நடத்தினால்தான், விவசாயிகள் பயன் பெற முடியும். கால்நடைகளின் பட்டினிச் சாவைத் தடுப்பதற்கு, டெராமைசின் மருந்து வழங்க வேண்டும்.

நீலநாக்கு நோயால் இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பு ஈட்டுத் தொகை வழங்குவதைப் போன்று, கோமாரி நோயினால் இறந்து போகும் கால்நடைகளுக்கும் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும். மாடுகளுக்கு ரூ 25,000, ஆடுகளுக்கு ரூ 10000 மற்றும் பன்றிகளுக்கு ரூ 5000 வழங்க வேண்டும். இறந்த கால்நடைகளை எடுத்து உரிய முறையில் அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு, ரூ.5000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.க. விவசாயிகள் அணி சார்பில், நவம்பர் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், கோவை, காந்திபுரம், ஹோட்டல் தமிழ்நாடு அருகில், கழகத் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விவசாய அணிச் செயலாளர் சூலூர் பொன்னுச்சாமி, மாவட்டச் செயலாளர்கள் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆர்.டி.மாரியப்பன், குகன் மில் செந்தில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x