Published : 29 Nov 2013 09:50 AM
Last Updated : 29 Nov 2013 09:50 AM
தமிழகத்தில் சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. இந்த கோமாரி நோய்க்கு பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள் கால்நடை ஆய்வாளர்கள்.
கோமாரி என்பது பிளவு பட்ட குளம்பு உள்ள விலங்குகளை குறிப்பாக மாடுகளை அதிகம் தாக்குகிற ஒருவித நச்சுயிரி ஆகும். விவசாயத்துக்கும் பால்வளத்துக்கும் மிக முக்கியமானவை மாடுகள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாய், கால் மற்றும் மடியில் புண்கள் தோன்றும். முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மாடுகள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஏற்கெனவே, வெப்பம் அதிகமாக இருந்தால் மாடுகள் குறைவாகப் பால் கறக்கும் என்று கால்நடைகளின் மீது பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்குச் சான்றுகள் இருக்கின்றன. இந்நிலையில், கோமாரி போன்ற நோய்கள் பரவுவதற்கும் பருவ நிலை மாற்றம் ஒரு முக்கியக் காரணம் என்று உலகளவில் நடந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அரசுத் துறையைச் சேர்ந்த கால்நடை ஆய்வு அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறியதாவது:
வெயில் காலத்திலிருந்து மழைக்காலம் தொடங்கும்போது கால்நடைகளுக்கு அதிலும் குறிப்பாக மாடுகளுக்கு கோமாரி போன்ற நோய்கள் வருகின்றன. மலைப் பிரதேசங்களில் உள்ள மாடுகளையும் இந்நோய் தாக்கும். இந்த பருவ நிலை மாற்ற பாதிப்பைத் தடுக்க கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக தேசிய அளவில் மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருடத்துக்கு இரண்டு முறை போட வேண்டிய அந்த தடுப்பூசியை பல விவசாயிகள் விழிப்புணர்வு இல்லாமையால் போடத் தவறுகின்றனர். எனவே, இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT