Published : 10 Nov 2013 01:14 PM
Last Updated : 10 Nov 2013 01:14 PM

மாதிரிப் பள்ளிகளை ஆதரித்ததே கருணாநிதிதான்: ஜெ. காட்டம்

மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு முந்தைய திமுக அரசுதான் ஒப்புதல் அளித்தது என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது" என்ற பழமொழிக்கேற்ப, தான் ஆட்சியில் இருந்த போது தன்னலத்திற்காக மத்திய அரசின் 'ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்யாலயா' திட்டம் குறித்து வாய்மூடி மவுனியாக இருந்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவு தெரிவித்து, அதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்திவிட்டு, இப்போது "மத்திய அரசுக்கு மறுப்புத் தெரிவிக்க மாநில அரசு முன் வருமா?" என்ற தலைப்பிலே மாநில சுயாட்சி குறித்து கருணாநிதி நீட்டி முழக்கி அறிக்கை வெளியிட்டு இருப்பது பித்தலாட்டத்தின் உச்சகட்டம்.

கருணாநிதியின் அறிக்கையைப் பார்க்கும் போது, இந்தத் திட்டத்தின் விவரத்தை முழுவதுமாக தெரிந்து கொண்டு பேசுகிறாரா? அல்லது எழுதுவதற்கு வேறு தலைப்பு கிடைக்காமல் வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறாரா? அல்லது இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சரியான, திடமான, தமிழர்களுக்கு ஆதரவான, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய முடிவினை எடுக்காததால், யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்ப நிலையில் மத்திய காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து அறிக்கை விடுகிறாரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

எது எப்படியோ, நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப கருணாநிதியின் அறிக்கை அமைந்துள்ளது. இந்தத் திட்டம் குறித்த உண்மை நிலையை விரிவாக எடுத்துரைப்பது எனது கடமையென கருதுகிறேன்.

2007 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமரால் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு ஏற்ப, "மாதிரிப் பள்ளி திட்டம்", செயல்படுத்தும் பணியை மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கியது. இந்தத் திட்டத்தில், இந்தியா முழுவதும் 6,000 மாதிரி பள்ளிகள் துவங்கப்பட வேண்டும் என்றும்; இதில் 3,500 மாதிரி பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாநில அரசுகள் மூலம் துவக்கப்படும் என்றும்; எஞ்சிய 2,500 பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்கள் அல்லாத ஏனைய வட்டாரங்களில் பொது தனியார் பங்கீட்டுடன், மூலம் துவங்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், இது குறித்த திட்ட அறிக்கையினை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் 19.11.2008 தேதியிட்ட கடிதம் மூலம் அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், சுற்றோட்டக் குறிப்பு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டு, அந்தக் கோப்பில் "அமைச்சரவையில் பேசலாம்" என்று கருணாநிதி தன் கைப்பட எழுதி இருக்கிறார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதியின் அறிவுரைக்கேற்ப, இந்தக் கருத்துரு 22.7.2009 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சரவைக்கான கூட்டக் குறிப்பின் இரண்டாவது பத்தியில் "தொடங்கப்படவுள்ள 6000 மாதிரிப் பள்ளிகளில், 2500 மாதிரிப் பள்ளிகள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் தொடங்கப்படும். அடுத்த 2500 மாதிரிப் பள்ளிகள் பொது தனியார் கூட்டுறவு என்ற முறையில் தொடங்கப்படும். எஞ்சிய 1000 பள்ளிகளை தொடங்குவதற்கான வழிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், "விரிவான விவாதத்திற்குப் பின், தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் 20 மாதிரிப் பள்ளிகளை மைய அரசு உதவியுடன் ரூ.75.40 கோடி மதிப்பீட்டில் தொடங்க விழையும் பள்ளிக் கல்வித் துறையின் கருத்துருவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் மாதிரி பள்ளிகளுக்கும், இதர வட்டாரங்களில் பொது தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளுக்கும் கருணாநிதியின் அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு தனது முழு ஒப்புதலை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக அப்போது வாய் திறக்காமல் ஒப்புதல் அளித்த கருணாநிதி; இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் கூட எழுதாத கருணாநிதி; தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

இந்தப் பள்ளிகளில் சேரும் மாணவ மாணவியருக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டு என்பதும் இந்தப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஆங்கில வழிக் கல்வி குறித்து வாய்கிழிய பேசும் கருணாநிதி, அப்போது ஏன் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்தார் என்பதை கருணாநிதி தான் தெரிவிக்க வேண்டும். இப்படி மாநில சுயாட்சிக்கு எதிராக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது செயல்பட்ட கருணாநிதி, தற்போது மாநில சுயாட்சி குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

கருணாநிதி தனது நீண்ட அறிக்கையில், இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், "இதற்கு முன் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் இத்தகைய மாதிரிப் பள்ளிகளை மத்திய அரசு அறிவித்த போது, தனியாரை அனுமதிக்காமல் தமிழக அரசே அந்தப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. அதே போல இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 356 மாதிரிப் பள்ளிகளையும் தமிழக அரசே தொடங்கி நடத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் எள்ளளவும் உண்மை இல்லை. ஏனெனில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களைப் பொறுத்த வரையில், மத்திய மாநில அரசு பங்களிப்புடன் மாதிரி பள்ளிகள் துவங்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம். அதன்படி, தமிழக அரசே மாதிரி பள்ளிகளை துவங்கியது. ஆனால், தற்போது கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள் அல்லாத பகுதிகளில் துவங்கப்படும் மாதிரி பள்ளிகள் பொது தனியார் முறையில் துவங்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம். எனவே தான், இந்தக் கருத்தை தனது கருத்தாக கூற கருணாநிதிக்கு கூச்சம் ஏற்பட்டு, ராமதாசின் அறிக்கையை மேற்கோள் காட்டியிருக்கிறார் போலும்.

6,000 மாதிரி பள்ளிகள் துவங்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பொது தனியார் பங்களிப்புடன் 2,500 மாதிரி பள்ளிகள் துவங்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளதா, இல்லையா? இந்தத் திட்டத்திற்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்ததா, இல்லையா? இந்த மாதிரி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படுவது கருணாநிதிக்கு தெரியுமா, தெரியாதா?

இந்த மாதிரிப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு 2010–2011ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது கருணாநிதிக்கு தெரியுமா, தெரியாதா? இத்தகைய கேள்விகளுக்கு கருணாநிதி விடையளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அமைய வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் குழுவின் கருத்துருவை தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு ஆதரித்த போது, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் என்ற வகையில், கூட்டு அதிகாரப் பட்டியலில் உள்ள 'கல்வி', மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வரும் சூழ்நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் பறிக்கின்ற வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்பதை நான் எனது அறிக்கை மூலம் நினைவூட்டியதை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.

இயல்பான மத்திய உதவி மூலம் மாநில அரசின் திட்டங்களுக்கு தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்பதும், இதில் மத்திய அரசின் திட்டங்களை இணைக்கக் கூடாது என்பதும் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. இதை நான் திட்டக் குழுத் துணைத் தலைவர் உடனான கூட்டங்களிலும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலும் எடுத்துரைத்து இருக்கிறேன் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு; உணவுப் பாதுகாப்புச் சட்டம்; மதிப்புக் கூட்டுவரி சட்டம் என மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் அல்லது குறைக்கும் பல்வேறு மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்த கருணாநிதி; மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதித்த கருணாநிதி; இன்று மாநில சுயாட்சி குறித்து பேசுவது கேலிக்கூத்தானது, எள்ளி நகையாடத்தக்கது.

இதே போன்று, காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, பாலாறு போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை தன்னலத்திற்காக காவு கொடுத்த கருணாநிதி, மாநில சுயாட்சிக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசிற்கு அறிவுரை கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், பொது தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் முதல் கட்டமாக, 41 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. இதில் ஒன்று கூட தமிழ்நாட்டில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 500 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கான ஒப்பந்தத்தினை மத்திய அரசு கோரியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15.11.2013 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது வரையில் தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒப்பந்தத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது போல்; முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியது போல்; கச்சத்தீவு பிரச்சனையில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது போல்; என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கவிடாமல் தடுத்தது போல்; சிங்களர்களுக்கு தமிழ்நாட்டில் ராணுவப் பயிற்சி அளித்ததை தடுத்தது போல்; இந்தப் பிரச்சனையிலும் எனது தலைமையிலான அரசு உறுதியான, தமிழர்களுக்கு பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை தமிழர்கள் பிரச்சனை; மீனவர் பிரச்சனை; மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பிரச்சனை; புதிய மின் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் காலம் தாழ்த்துதல் என பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பதைப் போல், இந்த விஷயத்திலும் மத்திய அரசு மவுனம் சாதிக்கும்.

இருப்பினும், இந்த மாதிரிப் பள்ளிகளை அடுத்த கல்வி ஆண்டுக்கு முன்னர் தொடங்க முடியாது என்பதால், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவிற்குப் பிறகு ஆட்சி மாறும், தமிழக மக்களுக்கு ஏற்றம் தரக்கூடிய மாற்றம் வரும், அதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x