Published : 16 Nov 2013 05:42 PM
Last Updated : 16 Nov 2013 05:42 PM

டேவிட்கேமரூனின் இலங்கை பயணம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது: ராமதாஸ் அறிக்கை

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின், இலங்கை பயணம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையின் விபரம்: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், யாழ்ப்பாணத்திற்கு சென்று போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். இன அழிப்பு போரில் சொந்தங்களையும், சொத்துக்களையும் இழந்து நீதி கிடைக்காதா? என ஏங்கிய ஈழத்து தமிழ் சொந்தங்களுக்கு டேவிட்கேமரூனின் பயணம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்க தமிழ்நாட்டில் எத்தகைய எதிர்ப்பு எழுந்ததோ, அதேபோன்ற எதிர்ப்பு கேமரூன் பங்கேற்பதற்கு எதிராக இங்கிலாந்திலும் எழுந்தது. எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய அவர், ‘‘ மாற்றங்களை ஏற்படுத்தவே நான் இலங்கை செல்கிறேன். போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக இலங்கையில் நடத்தப்படும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை சர்வதேச சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்’’ என்று கூறியிருந்தார்.

அதன்படியே இலங்கை அரசு ஏற்படுத்திய பல்வேறு முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு யாழ்ப்பாணம் சென்ற கேமரூன், வடக்கு மாநில முதலமைச்சர் விக்னேஸ்வரனையும், போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் சந்தித்து பேசியிருக்கிறார்.

வடக்கு மாநில முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தனி அலுவலகம் கூட இல்லாத நிலையில் அவரை யாழ்ப்பாணம் நூலகத்தில் கேமரூன் சந்தித்து பேசினார். முதல்வருக்கே அலுவலகம் அமைத்துத் தராத சிங்கள அரசு, ஈழத்தமிழருக்கு எத்தகைய அதிகாரத்தை வழங்கும் என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார். தமிழர்கள் வசிக்கும் வாழவே தகுதியில்லாத குடிசைகளுக்குள் சென்று பார்வையிட்ட அவர், தமிழர்களின் துயரங்களை உணர்ந்து கொண்டிருப்பார். போரின்போது காணாமல் போனவர்களின் உறவினர்களை விசாரித்த அவர், ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை உணர்ந்து கொண்டிருப்பார்.

இலங்கை விடுதலை அடைந்த 1948ஆம் ஆண்டிற்குப் பிறகு வடக்கு மாநிலத்திற்கு சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவரான கேமரூன், தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்களை நேரில் பார்த்ததாகவும், இதை உலகிற்கு கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ் சமுதாயத்திற்கு அளித்திருந்த வாக்குறுதியை கேமரூன் நிறைவேற்றி விட்டார். அவரது பயணம் இலங்கையின் போர்க்குற்றங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதில் ஐயமில்லை.

இலங்கையில் சிங்களர்கள் வாழ்ந்த சிலோனும், தமிழர்கள் வாழ்ந்த தமிழீழமும் 1833 ஆம் ஆண்டு வரை தனித்தனி நாடுகளாகவே விளங்கின. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களும், அதன்பின் டச்சுக்காரர்களும் ஒட்டுமொத்த இலங்கையையும் அடிமைப் படுத்திய பிறகும் கூட சிலோனும், தமிழீழமும் தனித்தனியாகவே இருந்தன. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்த பிறகு தான் 1833 ஆம் ஆண்டில் கோல்புரூக்- சார்லஸ் கேமரூன் குழு பரிந்துரைப்படி நிர்வாக வசதிக்காக சிலோனும், தமிழீழமும் இணைக்கப்பட்டு இலங்கை என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது. பின்னாளில் தமிழர்களை சிங்களர்கள் அடிமைப்படுத்தவும், இலட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து இரத்த ஆறை ஓட வைக்கவும் இந்த பரிந்துரை தான் அடிப்படையாக அமைந்தது.

இவ்வாறு 180 ஆண்டுகளுக்கு முன் சார்லஸ் கேமரூன் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில், இப்போது டேவிட் கேமரூனின் பயணம் அமைந்திருக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதில் இங்கிலாந்து பிரதமர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது.

அதே நேரத்தில் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும், கடமையும் கொண்ட இந்தியா அதற்காக எதையும் செய்யாதது வருத்தமளிக்கிறது. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவும் சில தவறுகளைச் செய்திருக்கிறது. அந்தத் தவறுகளுக்கு இங்கிலாந்து பிரதமர் வழியில் பரிகாரம் தேடிக் கொள்ள இந்திய அரசும் முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x