Published : 12 Dec 2013 10:15 AM
Last Updated : 12 Dec 2013 10:15 AM

தேமுதிக தலைமை செயற்குழு இன்று அவசரமாக கூடுகிறது

பண்ருட்டி ராமச்சந்திரன் விலகியதைத் தொடர்ந்து தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டம், சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது.

தேமுதிக அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த செவ்வாய்க்கிழமை கட்சிப்பொறுப்புகளில் இருந்தும் எம்.எல்.ஏ.பதவியையும் திடீரென ராஜினாமா செய்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இது, தேமுதிக தலைமைக்கும் தொண்டர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் வந்தன.

கட்சியில் இருந்து விலகும் முடிவை பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்த பிறகு இதுவரை தேமுதிக தரப்பில் இருந்து யாரும் அவரை அணுகவில்லை. போனில்கூட பேசவில்லை. மேலும் பண்ருட்டியின் விலகல் குறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அவசரமாக கூடுகிறது.

இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘செயற்குழுக் கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள், நாடாளுமன்றத் தேர்தல் குறித்துபேசுகிறார். தேமுதிக தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தனித்தனியே அழைப்பு கடிதம் அனுப்ப கால அவகாசம் இல்லாததால், இந்த அறிவிப்பையே கட்சியின் தலைமை விடுத்த அழைப்பாக ஏற்று, தலைமை செயற்குழுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரனின் முடிவு குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. புதிய அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பது, மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x