Published : 09 Dec 2013 11:31 AM
Last Updated : 09 Dec 2013 11:31 AM
நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது என்றும் மத்தியில் மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:
நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளை காங்கிரசுக்குப் பின்னடைவாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் இந்த நான்கு மாநிலங்களில்தான் பா.ஜ.க. ஆட்சியே உள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. என்ன ஆனது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தத் தேர்தல் முடிவுகளுக்கும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தமிழக காங்கிரஸ் தயாராக உள்ளது. கூட்டணியைப் பொறுத்தவரை, அது விவாதப் பொருளல்ல. மேலிடமும் காங்கிரஸ் செயற்குழுவும் கூடி முன்னிறுத்த வேண்டிய நிலைப்பாடு.
புதிய மாநிலச் செயலாளர்கள், மீதமுள்ள மாவட்டத் தலைவர்களின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். புதிய நிர்வாகிகள் காங்கிரசை மேலும் வலுப்படுத்துவர். ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:
நான்கு மாநில தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் எதிர்பார்க்காத ஒன்று. தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக காங்கிரசார் சோர்வடையவில்லை. 100 சதவீத தைரியத்தோடு நாடாளுமன்றத் தேர்தலில் மக்களைச் சந்திப்போம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் இளைஞர்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி, ஐந்து மாத இடைவெளியில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. அப்படித்தான் தற்போது, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க., வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடையும்.
தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டது, கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்பார்த்த பெயர்கள் இல்லாவிட்டாலும், எல்லோரையும் கலந்து பட்டியல் தயாரித்ததற்கு மேலிடத்துக்கும், மாநிலத் தலைவருக்கும் நன்றி. சில தனிப்பட்ட ஏமாற்றங்கள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. புதிய நிர்வாகிகளை பயன்படுத்தி கட்சியைப் பலப்படுத்த வேண்டும். ஏற்காடு தேர்தல் இன்னொரு திருமங்கலம்.
இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘பா.ஜ.க. வெற்றி நிரந்தரமானதல்ல. மோடி மாயை என்றுதான் சொல்ல வேண்டும். இது நீடிக்கும் வெற்றியல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். புதிய நிர்வாகிகளைக் கொண்டு கட்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். கோஷ்டிப் பிரச்சினைகள் இல்லாமல் இருந்தால், தமிழகத்தில் காங்கிரஸ் முதலிடத்தைப் பிடிக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT