Published : 12 Oct 2014 12:24 PM
Last Updated : 12 Oct 2014 12:24 PM
டோல் கட்டண வசூல் மையங்களில் கல்லூரி வாகனங்களுக்கு தனி கட்டணச் சலுகை வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் நான்கு வழிச் சாலைகளில் டோல் கட்டண வசூல் மையங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கரூர் டோல் கட்டண வசூல் மையத்தில் கல்லூரி வாகனங்களுக்கான மாத டோல் கட்டணம் செப். 1 முதல் ரூ.3915 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, கல்லூரி வாகனங்களுக்கும் கட்டண சலுகை வழங்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான வேறுபாடுகள் குறித்து ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என டோல் கட்டண வசூல் விதிகளில் கூறப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி வாகனங்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. கல்லூரி வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியதில் தலையிட முடியாது. எனவே, தனி நீதிபதி இந்த உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT