Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. உற்பத்தி 25 சதவீதம் குறைந்ததுடன், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளிலும், வேலூர், தர்மபுரி மாவட்டங்களிலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 400 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில், கோவில்பட்டி, கழுகுமலைப் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
பெரும்பாலான தொழிற்சாலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டவை. இவற்றில் 75 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மாதம் 50 லட்சம் பண்டல் தீப்பெட்டி உற்பத்தியாகிறது. ஒரு பண்டலில் 600 தீப்பெட்டிகள் இருக்கும். இந்தியா முழுமைக்கும், தமிழகத்தில் இருந்துதான் தீப்பெட்டி விநியோகமாகிறது.
ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடு களுக்கும், இங்கிருந்து தீப்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடுமையான மின்வெட்டு
“தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் கடுமையான மின்வெட்டு, தீப்பெட்டித் தொழிலையும் விட்டுவைக்கவில்லை. தீப்பெட்டித் தொழிலைப் பொறுத்தவரை, பெரும்பாலான பணிகள் மின்சாரத்தையே நம்பி உள்ளன. இதனால் மின்வெட்டு காரணமாக தீப்பெட்டித் தொழில் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. கடந்த இரு வாரங் களாக உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது” என்கிறார் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கச் செயலர் ஜே. தேவதாஸ்.
நலிவடையும் தொழில்
‘தி இந்து’விடம் பேசிய அவர், மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் தீப்பெட்டித் தொழில் ஏற்கெனவே நலிவடைந்த நிலையில் உள்ளது. தீப்பெட்டித் தொழிற்சாலைகள், கையினால் தயாராபவை, பகுதி இயந்திர மயமாக்கப்பட்டவை, முழுவதும் இயந்திரமயமாக்கப்பட்டவை என மூன்று விதமாக உள்ளன.
பெரும்பாலான தொழிற்சாலைகள், பகுதி இயந்திர மயமாக்கப்பட்டவையே. இவற்றைத் தனி பிரிவாக கருதி, அரசு சலுகை வழங்கி வருகிறது. அதாவது, பகுதி இயந்திர மயமாக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. ஆனால், அதிகாரிகள் விதிமுறைகளை சரியாக நடைமுறைபடுத்தாததால், முறையாக அங்கீகாரம் பெற்ற தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீக்குச்சி பிரச்சினை
தீக்குச்சிகள் தயாரிக்கப் பயன்படும் மரக்குச்சிகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்தோம். அவர்களையே நம்பி இருந்த காரணத்தால் விலையை கிலோ ரூ.55 வரை உயர்த்திவிட்டனர். அதேநேரத்தில் தரமில்லாத குச்சிகளையும் வழங்கினர். தற்போது, ரஷ்யா, சீனா, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரக்கட்டைகளை இறக்குமதி செய்கிறோம். இதனால் தரமான குச்சிகள் கிடைக்கின்றன.
தொழிலாளர்கள் வேலையிழப்பு
தீப்பெட்டி ஆலைகளில், காலை 8 முதல் மாலை 6 மணி வரை தொழிலாளர்கள் வேலை செய்வர். இந்த 10 மணி நேரத்தில் மூன்று முறை, 6 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் தொழிலாளர்கள் வேலையில்லாமல் சும்மா இருக்க வேண்டியிருக்கிறது. இதனால், உற்பத்தியாளர்களுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது. தொழிலாளர்களுக்கும் வருமானம் குறைகிறது.
பெட்டி தயாரிப்பும் பாதிப்பு
தீக்குச்சிகளை வைக்கும் பெட்டி தயாரிக்கும் பணியும் மின்சார இயந்திரங்கள் மூலமே நடக்கிறது. மின்வெட்டு காரணமாக இப்பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்டிகளின் விலை உயர்ந்துள்ளது. பெட்டி விலை கிலோ ரூ.25 முதல் ரூ.37 வரை இருந்தது. உற்பத்தி குறைந்ததால் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை விலை உயர்ந்துள்ளது.
மொத்தத்தில் மின்வெட்டு தீப்பெட்டி தொழிலை அனைத்து வகைகளிலும் பாதிப்படையச் செய்துள்ளது. ஏற்கெனவே கடன் வாங்கி இந்த தொழிலை நடத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்பதால் பாரம்பரியத் தொழிலை கைவிடாமல் செய்து வருகிறோம். அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தீப்பெட்டித் தொழிலுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT