திருவண்ணாமலை: 3 சிறுமிகளை பாதுகாப்பாக ஒப்படைத்த நடத்துநருக்கு காவல்துறை பாராட்டு


திருவண்ணாமலை: 3 சிறுமிகளை பாதுகாப்பாக ஒப்படைத்த நடத்துநருக்கு காவல்துறை பாராட்டு
தாம்பரத்தில் அதிகாலையில் பேருந்தில் ஏறிய 3 சிறுமிகளை பாதுகாப்பாக கொண்டு வந்து ஒப்படைத்த நடத்துநர் ஜெகதீசனை காவல்துறை பாராட்டியது.



சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை, திருவண்ணாமலை மாவட்டம் சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் ஓட்டினார். செல்லங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன் (36), நடத்துநராக பணியில் இருந்தார். 23 பயணிகள் பயணித்தனர்.

பேருந்து அதிகாலை 4 மணிக்கு தாம்பரத்துக்கு வந்தது. அப்போது, பேருந்தில் அவசர அவசரமாக 3 சிறுமிகள் ஏறினர். அந்த சிறுமிகளுடன் பெற்றவர்கள், பெரியவர்கள் யாரும் இல்லாததைக் கண்ட நடத்துநர் அதிர்ச்சி அடைந்தார். குருகுலம் மாணவிகள் ,எங்கே போக வேண்டும், உங்களுடன் பெரியவர்கள் யாரும் வரவில்லையா?, என்று நடத்துநர் கேட்க, ,திருவண்ணாமலைக்கு போக வேண்டும், என 3 சிறுமிகளும் கூறியுள்ளனர்.

மேலும், ,சென்னை சைதாப்பேட்டை ஜோதிமா நகரில் உள்ள திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப் பள்ளியில் 5,6,7-ம் வகுப்பு படித்து வரும் நாங்கள், அங்கிருக்க பிடிக்காமல் சுவர் எகிறி குதித்து வெளியேறி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மொளக்கரிச்சிகுட்டை கிராமத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு செல்கிறோம், என்று 3 சிறுமிகளும் கூறியதை கேட்டதும் நடத்துநர் உட்பட பேருந்தில் இருந்த அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. அங்கேயே இறக்கிவிட நடத்துநருக்கு மனமில்லை. பயணிகள் உதவி சிறுமிகளிடம் 50 ரூபாய் மட்டும் இருந்ததால், தங்கள் (ஓட்டுநர் மற்றும் நடத்துநர்) செலவில் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க நடத்துநர் ஜெகதீசன் முடிவு செய்தார்.

அதன்படி, 3 சிறுமிகளுக்கும் ரூ.194-க்கு டிக்கெட் கிழித்து கொடுத்தார். இதைப் பார்த்த நல்ல உள்ளம் கொண்ட பயணி ஒருவர், சிறுமிகளுக்கான கட்டணத்தை தாமாக முன்வந்து கொடுத்துள்ளார். மற்றொரு பயணி, சாப்பாட்டுக்கு ரூ.100 கொடுக்க, அதனை வாங்கி சிறுமிகளிடம் நடத்துநர் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில், திருவண்ணாமலைக்கு காலை 7.50 மணிக்கு அரசு பேருந்து வந்து சேர்ந்தது. இதையடுத்து, மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிகளை ஒப்படைத்துவிட்டு, நடந்த விவரங்களையும், தன்னைப் பற்றிய விவரங்களையும் தெரிவித்துவிட்டு நடத்துநர் சென்றுவிட்டார். சிறுமிகளுக்கு காலை சிற்றுண்டி வாங்கிக் கொடுக்கப்பட்டது. பின்னர் காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி 3 சிறுமிகளிடம் பேசினார்.

குருகுலத்தில் இருந்து மேலே உள்ள ஓடுகளை பிரித்து கீழே இறங்கி, பின்னர் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வந்ததாகவும், இதற்கு மற்ற மாணவர்கள் உதவி செய்தனர் என்றும் சிறுமிகள் கூறியது திகைப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல் நிலையம் உதவியுடன் குருகுல நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி பேசினார். 3 சிறுமிகளையும் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு ஆட்சேபம் இருக்கிறதா என்று கேட்டார். ஆட்சேபம் இல்லை என்று நிர்வாகத்தினர் பதிலளித்தனர்.

இதையடுத்து, மொளக்கரிச்சிகுட்டை ஊராட்சி மன்ற உப தலைவர் சீனுவாசனை தொடர்பு கொண்டு சிறுமிகளின் பெற்றோர்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்து மூவரையும் மகளிர் போலீசார் ஒப்படைத்து எழுதி வாங்கிக்கொண்டனர்.

இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கூறுகையில், ,பணம் இல்லை என்றதும் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு செல்லும் நடத்துநர்கள் இருக்கின்றனர். ஆனால், ஜெகதீசன் 3 சிறுமிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காவல் நிலையம் வரை அழைத்துவந்து பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளார். அவரது செயல் பாராட்டத்தக்கது, என்றார்.

நடத்துநர் ஜெகதீசன் கூறுகையில், 3 பெண் பிள்ளைகளை நடுவழியில் இறக்கிவிட மனமில்லை. அதுவும் அதிகாலை நேரம். ஆள் நடமாட்டம் குறைவு. ஏதாவது அசம்பாவிதம் நடத்துவிட்டால்? நம் வீட்டு பிள்ளைகளாக இருந்தால், எப்படி நடந்துகொள்வோம் என்று சிந்தித்துதான், காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்தேன் என்றார்.

FOLLOW US

WRITE A COMMENT

x