Published : 18 Oct 2013 10:45 AM
Last Updated : 18 Oct 2013 10:45 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் தாதுமணல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சிறப்புக் குழுவினர் தங்களது ஆய்வை வியாழக்கிழமை தொடங்கினர்.
திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் கடந்த பல ஆண்டு களாக, விதிகளுக்கு புறம்பாக தாதுமணல் அள்ளப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ஆஷிஷ்குமார், இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய ஆய்வு மற்றும் தாதுமணல் திருட்டு நடைபெற்றுள்ளதாக அவர் கூறிய கருத்துகள், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அவர் பணியிடம் மாற்றப் பட்டார்.
3 கட்ட ஆய்வு
இந்த விவகாரத்தில் முறைகேடு கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்ததனர். மாநில வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இச்சிறப்புக் குழு தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் அள்ளப் படும் இடங்களில், ஆகஸ்ட் 12, 13, 14-ம் தேதிகளில் முதல்கட்டமாகவும், 19, 20-ம் தேதிகளில் 2-ம் கட்டமாகவும், 29,30-ம் தேதிகளில் 3-ம் கட்டமாகவும் ஆய்வு நடத்தி, அரசிடம் அறிக்கை அளித்தது.
இதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. மேலும் மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கும் தடைவிதித்தது.
நெல்லை மாவட்டத்தில் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், நில அளவைத்துறை அதிகாரிகள், உதவி இயக்குநர்கள் என்று 15 குழுக்களைச் சேர்ந்த 128 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி தலைமையில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலையில் ஆலோசனை நடத்தினர். ஆய்வு செய்ய வேண்டிய இடங்கள், ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது, அறிக்கை தயாரிப்பது குறித்தெல் லாம் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆய்வு நடத்தும் இடங்களுக்கான சர்வே விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களும் அதிகாரி கள் குழுவினருக்கு அளிக்கப்பட்டது.
குழுக்கள் பயணம்
இக்கூட்டத்துக்குப்பின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி, வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோகிணிராம்தாஸ் ஆகியோருடன், ககன்தீப்பேடி தனியாக ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் ஆய்வு செய்யும் இடங்களுக்கு குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.
கோடன்விளை என்ற இடத்தில் நடைபெற்ற ஆய்வை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.
முதல் நாளே 22 இடங்களில் ஆய்வு
முதல் நாளில் மட்டும் குட்டம், கரைசுத்துஉவரி, லெவிஞ்சிபுரம், கரைசுத்துபுதூர், இருக்கன்துறை, செட்டிகுளம், கூடங்குளம், விஜயா பதி, திருவம்பலாபுரம் உள்ளிட்ட 22 இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு நடைபெற்ற இடங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அடுத்த 3 நாட்களுக்கு இந்த ஆய்வு நடைபெறுகிறது. முதல்நாள் ஆய்வின்போது மணல்குவாரிகள் அமைந்துள்ள பகுதி மக்கள், மீனவர்களை அதிகாரிகள் சந்தித்து பேசவில்லை.
பத்திரிகையாளர்கள் மறிப்பு
கோடன்விளை என்ற இடத்தில் ஆய்வு செய்ய சிறப்பு குழுவினர் சென்றபோது பத்திரிகையாளர்க ளும், ஊடகத்துறையினரும் வாக னங்களில் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த தாது மணல் குவாரி ஆதரவாளர்கள் சிலர் பத்திரிகையாளர்கள் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். சுமார் 2 மணிநேரமாக பத்திரிகை யாளர்கள் வாகனங்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியரின் தலையீட்டின்பேரில் போலீஸாரும், வருவாய்த்துறை அலுவலர்களும் அங்குவந்து மணல் ஆலை ஆதரவாளர்களுடன் பேசியதை அடுத்து பத்திரிகையாளர்களின் வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT