Published : 15 Oct 2013 02:33 PM
Last Updated : 15 Oct 2013 02:33 PM
நீலகிரி மாவட்டத்தில் அடையாளங்களாக இருப்பது தேயிலையும், சுற்றுலாவும்தான். இந்த சுற்றுலாவில் முக்கிய இடம் பிடிப்பது நீலகிரி மலை ரயில்.
இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை, கடந்த 1898ம் ஆண்டு மேட்டுபாளையத்திலிருந்து குன்னூர் வரை நிறுவப்பட்டது. பின்னர் 1908ம் ஆண்டு உதகை வரை இப்பாதை நீடிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த மலை ரயிலுக்கு கடந்த 2004ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே 16 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகள், 30 சாதாரண இருக்கைகளை உள்ளடக்கிய மூன்று பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது. ஆண்டு தோறும் மார்ச் - மே கோடை சீசனில் மட்டுமே மலை ரயிலில் கூட்டம் நிரம்பி வழியும். இந் நிலையில், தற்போது மத்திய அரசு டீசல் விலையை நிர்ணயக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதால், டீசல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் உயர்வு காரணமாக ரயில் கட்டணங்கள் ரயில்வே அமைச்சகம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு இரு முறை நீலகிரி மலை ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதமும் தற்போது இம் மாதமும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போது கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் படி உதகை-குன்னூர் இடையே கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் சாதாரண கட்டணம் ரூ.5 மற்றும் முன்பதிவுடன் ரூ.20 கட்டணம் தொடர்கிறது. உதகை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீராவி மற்றும் பர்னஸ் ஆயில் இஞ்சின்கன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-உதகை இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.180லிருந்து ரூ.185யாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.25லிருந்து ரூ.30யாக உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டுபாளையம்-குன்னூர் முதல் வகுப்பு கட்டணம் ரூ.160லிருந்து ரூ.165யாகவும், 2ம் வகுப்பு ரூ.20லிருந்து ரூ.30யாக உயர்த்தப்பட்டுள்ளது.
நீலகிரி மலை ரயில் உதகை வரை கடந்த 1908ம் ஆண்டு மாதம் நீடிக்கப்பட்டது. இதையடுத்து 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டதால் அன்றைய தினம் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று 105வது நீலகிரி மலை ரயில் தினம் கொண்டாடப்படுகிறது.
நீலகிரியில் சுற்றுலா மற்றும் மலை ரயில் மிகவும் பிரசித்தி பெற்றவை. நீலகிரி மலை ரயில் பாதையில் மேட்டுபாளையம்-குன்னூர் இடையே ஆடர்லி, ஹில்குரோவ், ரன்னிமேடு ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ரன்னிமேடு ரயில்நிலையம் இயற்கை சுற்றுச்சூழல் இடையே ரம்மியான பகுதியில் அமைந்துள்ளது.
ரயில் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறி இந்த ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
நீலகிரி பராம்பரிய நீராவி ரயில் அறக்கட்டளை சார்பில் ரன்னிமேடு ரயில் நிலையத்தை திறக்க முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த அறக்கட்டளை நிறுவனர் நடராஜன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நீலகிரி மலை ரயில் உலகப் பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில், பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். குன்னூரிலிருந்து 6 கி.மீ., தூரம் காட்டேரி பூங்காவை ஒட்டியுள்ளது ரன்னிமேடு ரயில் நிலையம். இயற்கை எழில் சூழந்த இடத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தை ‘ஹால்ட் ஸ்டேஷன்’ ஆக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து சேலம் கோட்ட மேலாளருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். ஆனால், ரயில்வே நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ரன்னிமேடு ரயில் நிலையத்தை முதல்வர் திறந்து வைக்க வேண்டும்,’ என அந்த கடிதத்தில் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT