Published : 10 Oct 2014 09:37 AM
Last Updated : 10 Oct 2014 09:37 AM
அஞ்சல் துறை சார்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கிசான் விகாஸ் முதலீட்டு பத்திர திட்டத்தை அக்டோபர் 16-ம் தேதி மீண்டும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு வட்டார முதன்மை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு வட்டார முதன்மை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி உலக அஞ்சல் சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து பொது அஞ்சல் சேவையை தொடங்கியது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் அஞ்சல் துறையின் பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கிசான் விகாஸ் பத்திரம்
கிசான் விகாஸ் முதலீட்டு பத்திர திட்டம் சமீப காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16-ம் தேதி இப்பத்திரத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அக்டோபர் 10-ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம் என்பதால் அன்று 5 லட்சம் பெண்களிடம் அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.
பார்சல்கள் தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் 2.5 லட்சம் பார்சல்கள் இந்திய அஞ்சல் துறை மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முடிய இது 3.35 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முடிவில் இது 7 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் கட்டணத்தால் வருவாய்
அஞ்சல் அலுவலகங்களில் மின் கட்டணம் வசூலிப்பதால் தமிழகத்தில் அஞ்சல் துறைக்கு மாதம் ரூ.1 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த சேவை தற்போது குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்களில் மட்டும் உள்ளது. இதை கிராமப்புற அஞ்சலகங் களிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
ஒரே நாளில் டெலிவரி
குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்களில் காலை 11.30 மணிக்குள் விரைவு அஞ்சல் பதிவு செய்வோருக்கு, அன்றே டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருக்கிறோம். அதன் வெற்றியை தொடர்ந்து அச்சேவை மற்ற அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT