Last Updated : 29 Nov, 2013 12:00 AM

 

Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

தூத்துக்குடி: தினை, வரகு சாகுபடி அதிகரிக்க முயற்சி

இட்லி, தோசை, அரிசி சாதம்… என அரிசி உணவை மட்டுமே உண்பதால், மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தேசிய சிறு தானிய இயக்கத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் பல விவசாயிகள் சிறு, குறு தானியப் பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடு:

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினை, வரகு, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு போன்ற குறு தானியங்களும், சோளம், கம்பு மற்றும் ராகி போன்ற சிறு தானியப் பயிர்களும் அதிகளவில் பயிரிடப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்களாக இவை திகழ்ந்தன.

ஆனால், அண்மைக் காலமாக இந்த உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்தது. அரிசி உணவே நாகரீக உணவாக மாறியது. அதிலும், சமீப காலத்தில், பாஸ்ட் புட் கலாச்சாரத்துக்கு மக்கள் மாறியுள்ளனர். இதன் காரணமாக மக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகரிக்கத் தொடங்கியது. மக்களின் தற்போதைய உணவு பழக்க வழக்கங்களால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகளவில் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால், மக்களிடம் மீண்டும் சிறு, குறு தானிய உணவு வகைகளுக்கு வரவேற்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

சாகுபடியை அதிகரிக்க முயற்சி:

இதனை கருத்தில் கொண்டு சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து, அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறு தானிய இயக்கம் என தனியாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு தானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு உரம், மருந்து போன்ற இடுபொருள்கள் வாங்குவதற்கு மானியம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சோளம், கம்பு போன்ற சிறு தானியங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3,000, குதிரைவாலி, தினை, வரகு, சாமை போன்ற குறு தானிய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது.

சிறு தானிய ஊக்குவிப்புத் திட்டம்:

இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், சிறு தானிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், நமது மாவட்டத்தில் கம்பு பயிர் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. செயல் விளக்கங்கள், விதை சிறு தளைகள், மாவட்ட அளவிலான கருத்தரங்கு, விவசாயிகளுக்கான பயிற்சி போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்காக 2011- 2012 முதல் இன்றைய தேதி வரை ரூ. 98.98 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

சிறு தானிய இயக்கம்:

அதேபோல் சிறு தானிய இயக்கத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் சோளம் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 3,000 வீதம், 1,000 ஹெக்டேருக்கும், குதிரைவாலி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,000 வீதம், 400 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

விதைகள் விநியோகம்:

மேலும் விவசாயிகளுக்கு விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. வீரிய ஒட்டு சோளம் சான்று விதைகள் 10 மெட்ரிக் டன் அளவில் ஒரு கிலோவுக்கு ரூ. 50 மானியத்திலும், குதிரைவாலி விதைகள் 3,000 கிலோ அளவில், கிலோவுக்கு ரூ. 10 மானியத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

பருவகால பயிற்சி:

சிறு, குறு தானியப் பயிர்கள் விதைப்பு காலம், வளர்ச்சி காலம், கதிர் விடும் காலம், அறுவடை காலம் ஆகிய 4 பருவங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க அரசு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், சிறு தானிய பயிர்களின் சாகுபடி நுட்பங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் புத்தகங்கள், துண்டுபிரசுரங்கள் அச்சிடப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்டத்திற்கு மானியத் தொகையாக ரூ. 40.77 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை ரூ. 29.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக விவசாயிகள் மத்தியில் சிறு, குறு தானியங்கள் சாகுபடி செய்யும் ஆர்வம் அதிகரித்துளது. எனவே, வரும் ஆண்டுகளில் சாகுபடி பரப்பு நிச்சயம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

விவசாயி நம்பிக்கை:

இதுகுறித்து, ஓட்டப்பிடாரம் வட்டம் ஜெகவீரபாண்டியபுரம் கிராமத்தில் குதிரைவாலி பயிரிட்டுள்ள விவசாயி ரா.ராதாகிருஷ்ணன் கூறுகையில், எனக்கு இந்த பகுதியில் 15 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. அதில், இரண்டரை ஏக்கரில் குதிரைவாலி பயிரிட்டுள்ளேன். இடு பொருட்கள் வாங்க மானியமாக ரூ. 2,000 கிடைத்தது. வீரிய ரகத்தை பயிரிட்டுள்ளதால் விளைச்சல் இருமடங்காக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு விளைச்சலை பார்த்து அடுத்த ஆண்டு கூடுதல் நிலத்தில் பயிரிடுவேன்.

இந்த ஆண்டு மழை போது மானதாக இல்லை என்ற போதிலும் நம்பிக்கையில் பயிரிட்டுள்ளோம். 10 நாட்களுக்கு ஒரு முறை பரவலாக மழை பெய்தாலே போதும். குதிரைவாலி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x