Published : 21 Oct 2014 01:31 PM
Last Updated : 21 Oct 2014 01:31 PM

இனிவரும் காலம் ஒளிமயமானதாக அமையட்டும்: விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து

இனிவரும் காலம் நமக்கு ஒளிமயமானதாக அமையட்டும் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு சிறக்கட்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "தீபாவளி திருநாள் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். ஏழை, நடுத்தரமக்களின் வாழ்வில் இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நாளாக இதை போற்றுகிறார்கள்.

கடவுளை வணங்கி, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வகைகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி கொண்டாடுவதை, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த இனிய நாளில் இருந்தாவது தங்களின் துன்பங்களும், துயரங்களும் நீங்கி, செழிப்பான வாழ்வுவாழ வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுகிறார்கள்.

இதுபோன்ற பண்டிகை என்றாலே ஏழை, நடுத்தர மக்கள் திணறிப்போய் விடுகின்றனர். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால், தங்கள் குடும்பத்தினருக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகை என எதையுமே வாங்கித்தர முடியாத நிலையில் அவர்களின் வருமானம் உள்ளது. அன்றாடம் குடும்பத்தை நடத்தவே பெரிதும் சிரமப்பட்டு தங்கள் வருமானத்திற்கு ஏற்ப பட்ஜெட் போட்டு செலவு செய்கின்றனர். அதுவும் பற்றாக்குறை பட்ஜெட்டாகவே உள்ளது. இதுபோன்று திடீர் செலவினங்கள் வரும்போது கூடுதல் செலவை ஈடு செய்ய உபரி வருமானத்திற்கும் வழி இல்லாமல் கடனை வாங்கி செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, இன்று வரை சுமார் 25 நாட்களாக அரசு இயந்திரம் முடங்கிப் போய் உள்ளது. அரசின் செயல்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பித்துப்போனதால், அரசின் பொது நிறுவங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு கூட உரிய நேரத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டிய பிறகே போனஸ் வழங்கப்பட்டது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்றவைகள் மூடப்பட்டதால் அதன் மூலம் தொழிலாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டபிறகே வன்முறைகளும், அராஜகங்களும், போராட்டங்களும் தமிழகத்தில் நின்றது.

இதுபோன்ற சூழ்நிலையில் தான் இந்த ஆண்டு தமிழகமக்கள் தீபாவளியை கொண்டாட வேண்டிய நிலை உள்ளது. இனிவரும் காலம் நமக்கு ஒளிமயமானதாக அமையட்டும் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு சிறக்கட்டும். தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், நிம்மதியோடும் தீபாவளியை கொண்டாட வேண்டுமென தே.மு.தி.க சார்பில் எனது இதயமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x