Published : 08 Oct 2014 04:48 PM
Last Updated : 08 Oct 2014 04:48 PM

மின்சாரத் துறை அமைச்சர் மாவட்டத்தில் மின் அட்டைகளுக்கு பற்றாக்குறை

மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதனின் சொந்த மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் மின் கணக்கீட்டு அட்டைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் கணக்கீட்டு அட்டை இல்லாத மின் நுகர்வோர், ஒவ்வொரு மாதமும் மின் கட்டண விவரம் தெரியாமல் மின்கட்டணம் செலுத்துவதில் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் பழநி, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வடக்கு, திண்டுக்கல் தெற்கு ஆகிய 5 மின்வாரிய டிவிஷன்கள் செயல்படுகின்றன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 7.50 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர்.

மின் கணக்கீட்டு ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் இணைப்பு பெற்றுள்ள குடியிருப்பு வீடு, வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக சென்று மின் பயனீட்டு அளவைக் கணக்கீட்டு, மின்சார அளவீடு குறிப்பிடப்பட்ட நாள், மின் அளவு, பயனீட்டு அளவு, மின் கட்டணம், அரசு மானியம் கழித்தல், கணக்காளரின் கையெ ழுத்து, மின் கட்டணம் செலுத்திய விவரம் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். மின் அட்டையில் குறிபிடப்பட்ட மின் கட்டணத்தை, மின் நுகர்வோர் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

கடும் பற்றாக்குறை

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மின் கணக்கீட்டு அட்டைகளுக்கு கடும் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. அதனால், மின் கணக்கீடு அட்டை இல்லாத வீடுகளில் மின் கணக்கீடு அளவிடவரும் மின் ஊழியர்கள், மின் பயன்பாட்டு அளவீடு, மின் கட்டணம் விவரத்தை அவர்கள் மட்டுமே குறிப்பெடுத்து செல்கின்றனர். மின் கணக்கீட்டு அட்டைகளில் குறிப்பிடுவதில்லை. பெரும் பாலும், வீடுகளில் வெளிப்புறமே மின் மீட்டர் வைக்கப்பட்டுள்ளதால் மின் கணக்கீட்டார்கள், மின் கணக்கீடு செய்ய வந்து செல்வது பெரும்பாலான மின்நுகர் வோருக்கு தெரிவதில்லை.

அதனால், கணக்கீட்டு அட்டை இல்லாதவர்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டணம் தெரியாமல் ஒவ்வொரு முறையும் சிரமம் அடைந்துள்ளனர். மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டு அட்டை கேட்டு எப்போது சென்றாலும், மின்சார ஊழியர்கள் மின் கணக்கீட்டு அட்டை பற்றாக்குறை உள்ளதாகவும், வந்ததும் தந்துவிடுகிறோம் என பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். அதனால், மின் நுகர்வோர் மின் கணக்கீட்டு அட்டை கிடைக்காமல் அதிருப்தியடைந்துள்ளனர்.

பற்றாக்குறை இல்லை: அதிகாரிகள்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பற்றாக்குறை இருந்தது. தற்போது மின் கணக்கீட்டு அட்டை பற்றாக்குறை இல்லை. போதுமான அளவு இருப்பு உள்ளது. மின் கணக்கீடு செய்த நாள் முதல் 20 நாள் மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் வழங்கப்படுவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. 5 ரூபாய் கட்டும் நுகர்வோருக்கு உடனடியாக மின் கணக்கீட்டு அட்டை வழங்க அறிவுறுத்தி உள்ளோம். மின்வாரிய அலுவலக ஊழியர்கள், மின் கணக்கீட்டு அட்டை தேவையை கேட்டு வாங்கி நுகர்வோருக்கு வழங்காமல் இருக்கலாம், இதுபற்றி விசாரிக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x