Published : 20 Nov 2013 01:59 PM
Last Updated : 20 Nov 2013 01:59 PM
ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டார்.
அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய உணவகம்:
இந்த உணவகம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களிலேயே, இந்த உணவகம்தான் மிகப் பெரியது. ஒரே நேரத்தில் 300 பேர் சாப்பிடலாம். உணவகத்தில் 40 டேபிள்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மின்விசிறிகள் போடப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர் சிரமம் இன்றி உணவு அருந்தும் வகையிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. டோக்கன் வழங்குவதற்கு 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை ரூ.1-க்கு இட்லி, ரூ.5-க்கு பொங்கல் வழங்கப்படும். மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர் சாதம் மற்றும் ரூ.5-க்கு கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்பட உள்ளது. மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் வழங்கப்படும். சப்பாத்திகள் மட்டும் வெளியில் தயாரித்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும்.
இந்த மருத்துவமனையில் தொடங்கப்படும் அம்மா உணவகத்தில், முதல் நாள் காலையில் விற்பனைக்காக 500 இட்லி தயாரிக்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்படும். முதல் நாள் என்பதால் மாலையில் சப்பாத்தி வழங்கப்படாது. ஓரிரு நாள்களில் மாலையில் சப்பாத்தி வழங்கப்படும். அதன்பின், படிப்படியாக உயர்த்தி தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இங்குள்ள இட்லி தயாரிக்கும் இயந்திரத்தில் 7 நிமிடத்தில் 1,000 இட்லிகள் தயாரிக்க முடியும். சமையல் வேலைக்காக பெண்கள் உள்பட 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 4 மணி முதல் 10 மணி வரை 20 ஊழியர்களும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 20 ஊழியர்களும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஊழியர்கள் ஒவ்வொருவருக்கு தினமும் ரூ.300 ஊதியம் வழங்கப்படும். சப்பாத்தி விற்பனை தொடங்கியதும் கூடுதலாக 20 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த அம்மா உணவகத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் என அனைவரும் பயன்பெறுவார்கள்' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT