Published : 12 Oct 2013 08:41 PM Last Updated : 12 Oct 2013 08:41 PM
காங். அணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சியே: ஜி.கே.வாசன்
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் தேமுதிக இடம்பெற்றால் மகிழ்ச்சியே என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இலங்கை பயணம் மூலம் தமிழக மீனவர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு, உரிமை, வளர்ச்சி குறித்து பேச்சு வார்த்தையில் விவாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அங்குள்ள படகுகளை மீட்கவும் தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற தமிழக மக்கள் எண்ணம் ஒருபுறம். மறுபுறம் இலங்கையில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வு. எனவே, இரண்டையும் வைத்து மத்திய அரசு முடிவு எடுக்கும்" என்றார் வாசன்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்று கேட்டதற்கு, "நல்ல அணியில் இடம்பெற்றால் சந்தோஷம்தான்" என்றார் அமைச்சர் ஜி.கே.வாசன்.
WRITE A COMMENT