Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
கடும் விலையேற்றமே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் சாதனை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
ஏற்காடு இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து இரண்டா வது நாளாக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். வெள்ளாளகுண்டம், அயோத்தி யாப்பட்டணம், சிங்கிபுரம், பழனியா புரம், முத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், மக்களிடையே பேசியது:
தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சிதான் நடக்கிறது. பாலியல் துன்புறுத்தல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது.
பொதுவாக, மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக்கடிக்கும். ஆனால், தற்போது மின் கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில், பொன்னி அரிசி சிப்பம் ரூ.855-க்கு விற்பனையானது. அதிமுக ஆட்சியில் அது ரூ.1,355-ஆக உயர்ந்து விட்டது. லிட்டர் ரூ.84-க்கு விற்ற நல்லெண்ணெய் ரூ.220-க்கும், ரூ.31-க்கு விற்ற கடலைப்பருப்பு ரூ.54-க்கும், ரூ.42-க்கு விற்ற பொட்டுக்கடலை ரூ.65-க்கும், ரூ.60-க்கு விற்ற துவரம்பருப்பு ரூ.70-க்கும்,
ரூ.38-க்கு விற்ற புளி ரூ.65-க்கும், ரூ.32-க்கு விற்ற ரவை ரூ.45-க்கும் விற்கப்படுகிறது.
ஏற்காடு மக்களுக்கு பணமும், காமாட்சி விளக்கும் கொடுத்து, அதிமுக-வினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இடைத்தேர்தல் என்பதால், சேலம் மாவட்டத்தில் மின் வெட்டு இல்லை. தேர்தல் முடிந்தவுடன் 12 மணி நேர மின்வெட்டு தொடரும். அப்போது, அதிமுக-வினர் கொடுத்த காமாட்சி விளக்கு பயனுள்ளதாக இருக்கும்.
திமுக தலைவர் கருணாநிதி, தமிழக முதல்வராகப் பதவியேற்றபோது, ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் அதிமுக அரசு வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்துள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக நிறைவேற்றியது. அதிமுக அரசு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. ஆனால் திமுக, காங்கிரஸ் மீது குறைகளைக் கூறி வருகிறார்கள்.
விலையேற்றம்தான் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் சாதனையாக உள்ளது. அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் திமுக வேட்பாளர் மாறனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ஸ்டாலின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT