வேலூர் சிறையில் பிலால் மாலிக்


வேலூர் சிறையில் பிலால் மாலிக்

புத்தூரில் பிடிபட்ட பிலால் மாலிக் சனிக் கிழமை இரவு வேலூர் சிபிசிஐடி அலுவலகத் திற்கு கொண்டு வரப்பட்டார். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாஜிஸ்திரட் சிவக்குமார் வீட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். வரும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

வயிற்றில் சிக்கிய துப்பாக்கி குண்டு

புத்தூரில் தீவிரவாதிகளை பிடிக்க முயன்றபோது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் பன்னா இஸ்மாயில் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இவர்தான், ஆய்வாளர் லட்சுமணனை கத்தியாலும் குக்கராலும் தாக்கினார். ஆய்வாளரை காப்பாற்ற நடந்த முயற்சியில்தான் இஸ்மாயிலை சுட வேண்டிய கட்டாயம் காவல் துறையினருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்மாயிலின் வயிற்றில் பாய்ந்த துப்பாக்கி குண்டு பெருங்குடலையும் கல்லீரலையும் தாக்கி இரண்டு உறுப்புகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவருக்கு சனிக்கிழமை இரவு உடனடியாக அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் துப்பாக்கி குண்டை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

குண்டை அகற்றினால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு இஸ்மாயில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனால் அந்த முயற்சியை மருத்துவர்கள் கைவிட்டனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை துறை மருத்துவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து துப்பாக்கி குண்டை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்மாயிலின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு வந்து அவரை பார்த்து அழுதனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x