Published : 23 Jun 2017 11:11 AM
Last Updated : 23 Jun 2017 11:11 AM

தமிழக அரசே அதிக அளவில் மணல் குவாரிகளை கையாள வேண்டும்: வாசன்

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றவும், மணலை குறைந்த விலையில் விற்கவும் தமிழக அரசே அதிக அளவில் மணல் குவாரிகளை கையாள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசே ஏற்றுச் செயல்படுத்தும் என கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கெண்டே போகிறது.

இதற்குக் காரணம் ஏற்கெனவே இருந்த மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது அரசே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் குறைவான மணல் குவாரியில் இருந்து கிடைக்கும் மணல் தமிழகம் முழுவதுமான கட்டுமானப் பணிகளுக்குப் போதுமானதாக இல்லை. இதனால் ஏற்கெனவே தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தடைப்பட்டு இருப்பதோடு, புதியதாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அரசுப் பணிகளும், தனியார் நிறுவனப் பணிகளும், பொது மக்களின் வீட்டுப் பணிகளும் முடங்கி கிடக்கின்றது.

மேலும் மணல் கிடைப்பது அரிது என்றாலும் அதனையும் அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய கட்டாய நிலையே உள்ளது. உதாரணத்திற்கு முன்பெல்லாம் 2 யூனிட் அளவுள்ள லாரியில் மணல் வாங்கினால் அதற்கான விலை சுமார் 12 ஆயிரம் என்றால் தற்போது அதன் விலை சுமார் 27 ஆயிரம். இந்த விலையேற்றத்தால் பெருமளவு பாதிக்கப்படுவது புதியதாக வீடு கட்டும் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றவும், மணலை குறைந்த விலையில் விற்கவும் தமிழக அரசே அதிக அளவில் மணல் குவாரிகளை கையாள வேண்டும்.குறிப்பாக அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து மணல் கடத்தப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நிலம் வாங்குவதிலும், விற்பதிலும் தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில் உள்ள குறைபாடுகளால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் நிலம் வாங்க, விற்க முன்வரும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் தமிழக அரசு பிறப்பித்த புது ஆணையின் படி நிலம் வாங்குவதிலும், விற்பதிலும் இன்னும் முறைப்படுத்தப்படாமல் உள்ளதால் பத்திரப்பதிவு முறையாக, சரியாக நடைபெறாமல் உள்ளது.

எனவே தற்போதைய சூழலில் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாடு, பத்திரப்பதிவில் உள்ள காலதாமதம் இவையெல்லாம் பொது மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழிலுக்கு போதிய மணல் கிடைக்காததாலும், நிலம் வாங்குவதிலும், விற்பதிலும் உள்ள காலதாமதத்தினாலும் அரசுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, கட்டுமானத் தொழில் முடங்கிப் போன சூழலில் சுமார் 30 இலட்சம் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு மணல் குவாரிகளை முழுமையாக ஏற்று, குறைந்த விலையில் விற்பதற்கும் மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் மூலம் பத்திரப்பதிவு முறையாக, சரியாக, தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெறுவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x