Published : 18 Oct 2014 09:53 AM
Last Updated : 18 Oct 2014 09:53 AM
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு நீதிமன்ற ஊழியர்கள் சீல் வைத்தனர்.
கிருஷ்ணகிரி டவுன் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் கமால்பாஷா (40). மோட்டார் மெக்கானிக். இவர் கடந்த 24-4-2009-ம் தேதி கண்ணன்டஅள்ளி சென்றிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நடந்து செல்லும்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து கமால்பாஷா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து கமால்பாஷாவின் மனைவி ஜம்ருத்பேகம், அரசு போக்குவரத்துக் கழகம் தனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஜம்ருத்பேகத்துக்கு ரூ.6 லட்சத்து 2 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2-1-2012-ம் தேதி தீர்ப்பளித்தார். ஆனால் போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது.
நிறைவேற்று மனு
இதையடுத்து ஜம்ருத்பேகம் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 3-6-2013 அன்று ஜம்ருத் பேகத்துக்கு 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் இழப்பீடு தொகை வழங்க வில்லை.
இதைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி கமலாவதி, ஜம்ருத்பேகத்துக்கு இழப்பீடு தொகை வழங்காததால், அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தை ஜப்தி செய்து சீல் வைக்க வேண்டும் என கடந்த 19-9-2014-ம் தேதி தீர்ப்பளித்தார்.
சீல் வைப்பு
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புறநகர் கிளை அலுவலகத்துக்கு வந்த நீதிமன்ற ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து, அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT