Published : 15 Nov 2013 10:07 AM
Last Updated : 15 Nov 2013 10:07 AM

நேரடி ஒளிபரப்பில் விஜதாரணி எம்.எல்.ஏ.விடம் தரக்குறைவாக பேசிய இளைஞர் மீது நடவடிக்கை

நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ விஜயதாரணியை தரக்குறைவாக பேசிய இளைஞர் மீது காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் புதன்கிழமை இரவு இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நேயர்களும் பங்கேற்றனர். அப்போது விஜயதாரணி எம்.எல்.ஏ.விடம் பேசிய ஒரு இளைஞர் முதல்வர் ஜெயலலிதாவையும், விஜயதாரணியையும் தரக்குறைவான, ஆபாசமான வார்த்தையால் திட்டியுள்ளார். இது நேரடியாகத் ஒளிபரப்பானது. இதைக் கேட்டவர்கள் ஒரு விநாடி கடும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

உடனே நிகழ்ச்சியை முடித்த விஜயதாரணி எம்.எல்.ஏ. இரவு 11.30 மணிக்கு காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தார்.

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் நரேந்திரநாயர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனுவைப் பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக நள்ளிரவே விசாரணை நடத்தப்பட்டது.

தொலைபேசி எண்ணை வைத்துக் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தரக்குறைவாகப் பேசிய இளைஞரின் பெயர் தமிழ்வாணன் என்று தெரியவந்தது. அவரைக் கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக உள்ளனர். அவரது ஊர் மற்றும் விவரங்களைப் போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

விஜயதாரணி எம்.எல்.ஏ. இது பற்றி கூறும்போது, "பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x