Published : 20 Jun 2017 11:58 AM
Last Updated : 20 Jun 2017 11:58 AM
எண்ணூர் காமராசர் துறைமுகத்தை விற்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“ ஜீன் 19, 2017 அன்று வெளியான இந்து பிஸ்னஸ் லைன் நாளேடு ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள, மத்திய அரசுக்கு சொந்தமான பெரிய துறைமுகங்களில் ஒன்றான மிகச்சிறந்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை முழுவதுமாக விற்றுவிடுவது என்பதுதான் அந்தச் செய்தி. எண்ணூர் காமராஜர் துறைமுகம் பல வகைகளிலும் சிறப்பு பெற்றது.
சென்னை துறைமுகம் தமிழகத்தில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை கையாண்டு கொண்டிருந்தது. மின் நிலையங்களின் நிலக்கரி தேவைகள் அதிகரிப்பதை கருத்தில்கொண்டும் சென்னை துறைமுகத்தில் கூடுதலாக நிலக்கரியை கையாள்வதால் ஏற்படும் மாசை தவிர்க்கவும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் உருவாக்கிட, 1996 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாகவும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், (டிட்கோ) மூலமாகவும் ஏறத்தாழ 2100 ஏக்கர் நிலத்தை எண்ணூர் துறைமுகத்திற்கு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
அதன் காரணமாக துறைமுகப்பணிகள் முடுக்கி விடப்பட்டு பிப்ரவரி 2001 ல் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தது. அண்மையில், இந்த துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேலும்1000 ஏக்கர் நிலத்தை காமராஜர் துறைமுகத்திற்கு வழங்கியது. இன்றைய சந்தை விலைப்படி பார்த்தால் காமராஜர் துறைமுகத்தின் வசம் உள்ள ஏறத்தாழ 3000 ஏக்கர் நிலத்தின் மதிப்பு மட்டும் ரூபாய் 15000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடலாம்.
காமராஜர் துறைமுகம் ஒரு புதிய முயற்சியாக நாட்டின் முதல் கார்ப்பரேட் துறைமுகமாக அமைந்தது. அதன் மொத்த மூலதனமான ரூபாய் 300 கோடியில் மத்திய அரசு ரூபாய் 200 கோடியை வழங்கியது. எண்ணூரில் புதிய துறைமுகம் அமைவதால் சென்னை துறைமுகத்திற்கு இழப்பு ஏதும் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மொத்த மூலதனத்தில் 33 சதவிகிதம் அதாவது ரூபாய் 100 கோடி மூலதனத்தை ஏற்கும்; வாய்ப்பு சென்னை துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டது.
கார்ப்பரேட் துறைமுகமான எண்ணூர் 2006-07 ல் 105 கோடி ரூபாய் வருவாயும் ரூபாய்25.35 கோடி ரூபாய் இலாபமும் ஈட்டிய நிலையில், சென்ற 2016 – 17 ஆம் நிதியாண்டில் ரூபாய் 680 கோடி வருவாயும், ரூபாய் 480 கோடி இலாபமும் ஈட்டி மாபெரும் சாதனை புரிந்துள்ளது.
நிலக்கரி இறக்குமதியை மட்டுமே கையாண்டு கொண்டிருந்த எண்ணூர் துறைமுகத்தை அனைத்து வகை சரக்குகளையும் கையாளக்கூடிய வல்லமை பெற்ற துறைமுகமாக மாற்றி அமைக்க 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால், தேசிய கடல்சார் வளர்ச்சி திட்டம் வகுக்கப்பட்டது.
தமிழகத்தை பொறுத்த வகையில் 2004தொடங்கி 2009 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தேசிய கடல்சார் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15001 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
குறிப்பாக எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு தேசிய கடல்சார் வளர்ச்சி திட்டத்தின் முதல்கட்டமாக ரூபாய் 6486 கோடி செலவில் 14 புதிய திட்டங்கள் உருவாக்கி செயல்பாடுகள் துவங்கப்பட்டன புதிய நிலக்கரி இறக்குமதி முனையங்கள், இரும்புதாது ஏற்றுமதி முனையம், திரவ எரிவாயு (LPG) இறக்குமதி முனையம், கார்கள் ஏற்றுமதி முனையம், சரக்கு பெட்டக முனையம், திரவ இயற்கை எரிவாயு (LNG Terminal ) இறக்குமதி முனையம் என பல்வேறு திட்டங்கள் இவற்றுள்அடங்கும். இந்த திட்டங்களில் பெரும்பான்மையான திட்டங்கள்நிறைவேற்றுபட்டுவிட்டன. எல்.என்.ஜி முனையத் திட்டப்பணிகளும்முழுவீச்சில் நடைபெறுகின்றன.
ஆக, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் முதல்கட்ட வளர்ச்சி முழுவதுமாக முடிவடையாத நிலையிலேயே இந்த துறைமுகம் அசுர வளர்ச்சி பெற்று மிகக் குறுகிய காலத்தில் ரூபாய் 480 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. மேலும், சென்ற 8 ஆண்டுகளாக மத்திய அரசுக்கும், சென்னை துறைமுகத்துக்கும் மூலதான பங்குதரார்கள் என்ற முறையில் 40சதவிகிதம் வரை ஈவு தொகை வழங்கியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான 12 பெரிய துறைமுகங்களில், மத்திய அரசுக்கு ஈவுத்தொகை(Dividend) தரும் ஒரே துறைமுகம் காமராஜர் துறைமுகம் தான். அதேநேரத்தில் இந்த துறைமுகம் தனது வளர்ச்சி திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி, தனது இலக்கான 130 மில்லியன் டன் சரக்கு கையாளும் திறனை அடையுமானால் எண்ணூர் காமாரஜர் துறைமுகம் எந்த அளவுக்கு இலாபகரமாக இயங்கும் மத்திய அரசுக்கு எந்த அளவுக்கு வருவாய் ஈட்டி தரும் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் காமராஜர் துறைமுகத்தை அவசர அவசரமாக விற்பதற்கு இன்றைய அரசு ஏன் முழு முயற்சியில் இறங்கி உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது என்றே எவரும் கூறிட முடியும்
ஏற்கனவே தனியார் பங்களிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் காமராஜர் துறைமுகத்தை அவசர அவசரமாக விற்பதற்கான அவசியம் என்ன? சிறப்பாக இயங்கும் இந்நிறுவனத்தை மத்தியில் ஆளும் ஆட்சிக்கு நெருக்கமான பெரும் முதலைகளுக்கு வெள்ளி தட்டில் வைத்து தாரை வார்க்க துடிப்பது ஏன்? இன்றைக்கு பதவியிலே ஒட்டிக்கொண்டிருக்கும் மாநில அரசு இது போன்ற தமிழக விரோத செயல்களை தட்டிக் கேட்காது என்ற நம்பிக்கையில் இந்திய அரசு செயல்பட நாம் அனுமதிக்கலாமா?
ஏற்கனவே சேதுசமுத்திரத்திட்டத்தை கிடப்பில் போட்டு முடக்கிவிட்டார்கள். கேட்டால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று நொண்டிச்சாக்கு சொல்லும் கப்பல் துறை அமைச்சர் அவர்களிடம் எந்த நீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடைவிதித்துள்ளது என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்க விரும்புகிறார்கள்.
சேதுசமுத்திர திட்டத்திற்கு ஏற்பட்ட நிலைதான் சென்ற மூன்று ஆண்டுகளாக உரக்க பேசப்பட்ட குளச்சல் துறைமுக திட்டத்திற்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் உள்ளது. ஏனென்றால் மிக அண்மையில் கொழும்பு துறைமுகத்தின் வளர்ச்சிக்கு இந்திய அரசு துணை புரிய உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இலங்கையின் வளர்ச்சிக்கோ இலங்கையில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக இந்தியா துணை நிற்பது தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் நாம் இலங்கைக்கு செய்யும் உதவி குளச்சல் துறைமுகம் போன்ற நமது வளர்ச்சி திட்டங்களை காவு கொடுத்துதான் அமைய வேண்டும் என்றால் தமிழகம் அதை ஒருபோதும் ஏற்காது.
மத்திய அரசு, இது போன்று தமிழகத்திற்கு நலம்பயக்கும் மாபெரும் வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் செயல்படுமானால் அன்றைக்கு அண்ணா “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்று முழுங்கினாரே அந்த முழக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய சூழல் உருவாகும்.
காமராஜர் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் அடையாளமாக தனிச்சிறப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் அரசின் சொத்தான எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைத் தனியாருக்கு விற்கும் எந்த முயற்சியையும் தமிழகம் ஒரு நாளும் ஏற்காது என்பதை மத்திய அரசும், மாநில அரசும் நினைவில் கொள்ள வேண்டும் இல்லையேல் அப்படிப்பட்ட துரோகச் செயலுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்றக வேண்டும். அவர்களை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று டி.ஆர்.பாலு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT