Published : 02 Dec 2013 07:30 PM
Last Updated : 02 Dec 2013 07:30 PM
ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாத கட்சிகள், திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கான பிரசாரம் இன்று முடிந்துவிட்டது. பிரசாரத்துக்காக அங்கு முகாமிட்டவர்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டனர்.
உடல் நிலை காரணமாகவும் நானும், பொதுச் செயலாளர் அன்பழகனும் பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஆனாலும் பொருளாளர் மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி. துரைசாமி, மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பிரசாரம் செய்தனர்.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் செய்த முறைகேடுகள் குறித்தும், அதனை தேர்தல் ஆணையம் கண்டித்த சம்பவங்களையும் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நடைபெறும் ஆட்சியில் எந்தத் தரப்பினரும் நிம்மதியாக இல்லை. விவசாயிகளின் வேதனையை கேட்கவே வேண்டியதில்லை. மின்வெட்டு மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. தொழில் நிறுவனங்கள் திணறுகின்றன. ஆட்சிக்கு எதிராகப் பேசினால் அவதூறு வழக்கு போடப்படுகிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது.
நல்லவேளையாக இந்தத் இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை. அவர்களின் ஆதரவைக்கோரி நான் கடிதம் எழுதினேன். ஒரு சில கட்சிகள் பதில் எழுதவில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்கள். இதனை அந்தக் கட்சியினர் அறிந்திருப்பார்கள்.
எனவே, ஆளும் கட்சியினருக்கு பாடம் கற்பிக்க அவர்கள் திமுக வேட்பாளர் வெ.மாறனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT