Published : 24 Jun 2017 03:12 PM
Last Updated : 24 Jun 2017 03:12 PM
இந்தியில் மட்டும் கூடுதலாக பாஸ்போர்ட் வழங்குவது இந்தித் திணிப்பாகவே பார்க்கப்படும் என்பதால், அந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் இரு மொழிகளில் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்படி இனி பாஸ்போர்ட்டில் ஆங்கிலத்துடன் இந்தியும் இடம் பெற்றிருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார். இந்திக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்படுவதை ஏற்க முடியாது.
பாஸ்போர்ட்டில் இந்தி மொழி கட்டாயமில்லை என்றும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்தியிலும் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், படிப்படியாக இந்தி கட்டாயமாக்கப்படும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. பாஸ்போர்ட்டில் இந்தியை அறிமுகம் செய்வதற்காக அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அளித்துள்ள விளக்கங்களும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
அரபு நாடுகளில் அரபு மொழியிலும், ஜெர்மனியில் ஜெர்மன் மொழியிலும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியிலும் பாஸ்போர்ட் அச்சிடப்படும்போது இந்தியாவில் ஏன் இந்தியில் பாஸ்போர்ட் அச்சிடக்கூடாது என்று வினா எழுப்பி தமது முடிவை நியாயப்படுத்த சுஷ்மா சுவராஜ் முயன்றிருக்கிறார். அவரது வாதம் மிகவும் அபத்தமானது.
ஜெர்மனியில் ஜெர்மன் மொழி பேசும் மக்களும், அரபு நாடுகளில் அரபு பேசும் மக்களும், ரஷ்யாவில் ரஷ்ய மொழி பேசும் மக்களும் தான் பெரும்பான்மை குடிமக்களாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட மொழி பேசும் மக்கள் குடிமக்களாக உள்ளனர். அவற்றில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு தேசிய மொழிக்கு இணையான தகுதியை பெற்றுள்ளன. அவ்வாறு இருக்கும் போது இந்திய பாஸ்போர்ட்டில் இந்தியை அச்சிடுவதில் என்ன தவறு? என்று கேட்டு இந்தியாவை ஒற்றை மொழி பேசும் நாடாக காட்ட முயல்வது கண்டிக்கத்தக்கது.
பாஸ்போர்ட்டில் குடிமக்கள் குறித்த விபரங்கள் ஆங்கிலத்தில் இருக்கும். குடிமக்கள் விரும்பினால் ஆங்கில விபரங்களுக்கு அருகில் தங்கள் விவரங்களை தேவநகரி வடிவிலும் இடம் பெறச் செய்யலாம் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. குடிமக்கள் விவரங்களை கூடுதலாக இந்தியில் இடம்பெறச் செய்யலாம் என்றால் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் அவற்றைப் பதிவு செய்வதில் எந்த சிரமமும் இருக்காது.
எனவே, இரு மொழிகளில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்பது தான் சுஷ்மா சுவராஜ் அவர்களின் நோக்கம் என்றால், எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில், குடிமக்கள் விரும்பும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் பாஸ்போர்ட் வழங்க முன்வர வேண்டும்.
மாறாக இந்தியில் மட்டும் கூடுதலாக பாஸ்போர்ட் வழங்குவது இந்தித் திணிப்பாகவே பார்க்கப்படும் என்பதால், அந்த முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT