Last Updated : 08 Oct, 2013 12:06 PM

 

Published : 08 Oct 2013 12:06 PM
Last Updated : 08 Oct 2013 12:06 PM

தீவிரவாதி அபுபக்கரை பிடிக்க 10 தனிப் படை

காவல்துறை கண்ணில் மண்ணைத்தூவி கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் அபுபக்கர் சித்திக்கை பிடிக்க 10 தனிப்படைகள் வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளன.

மதுரையில் பால் கடைக்காரர் சுரேஷ், பரமக்குடியில் பூசாரி முருகன், வேலூரில் பா.ஜ.கவின் அரவிந்த் ரெட்டி, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், சேலத்தில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

இதே போல பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட மத இயக்கங்களின் பிரமுகர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வு பிரிவின் (எஸ்.ஐ.டி) கீழ் இந்த படுகொலை வழக்குகள் அனைத்தும் கொண்டு வரப்பட்டன. இந்த கொலை களுக்கு காரணமாக கூறப்பட்ட "போலீஸ்" பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிறப்பு புலனாய்வு படையினர் கைது செய்துள்ள நிலையில், அபுபக்கர் சித்திக் மட்டும் இன்னும் சிக்கவில்லை.

இந்தக் கொலைச் சம்பவங்களுக்கெல்லாம் காரண கர்த்தாவாக தீவிரவாதிகளின் முக்கிய தளபதியாக விளங்கிய வர்தான் அபுபக்கர் சித்திக் என்று சிபிசிஐடி அறிவித்தாலும், சில அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். 2002ம் ஆண்டு இமாம் அலி காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அபுபக்கர் சித்திக் தமிழகம் வருவதையே நிறுத்தி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை.

அதேநேரம் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு திரைமறைவில் இருந்தபடியே சித்திக் கட்டளைகளை பிறப்பித்து வந்திருக்கலாம் என்று கூறப் பட்டது. அதைத் தொடர்ந்து பக்ருதீன் செல்போன் மற்றும் சிம்கார்டை ஆய்வு செய்தபோது சித்திக்குடன் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. பக்ருதீன் உட்பட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையிலும், சித்திக் குறித்த தகவல்கள் தங்களுக்கு தெரியாது என்றே திரும்ப திரும்ப கூறினர்.

அபுபக்கர் சித்திக் அதி பயங்கரமானவ நபர் என்பதால் அவரையும் சூட்டோடு சூடாக பிடித்துவிட வேண்டும் என்பதில் சி.பி.சி.ஐ.டி. தீவிரம் காட்டி வருகிறது. சித்திக் தமிழகத்தில் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், வடமாநிலங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அவர் பதுங்கி இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

மும்பை காவல் துறை ஒருமுறை சித்திக்கை கைது செய்து விடுவித்திருப்பதால் அங்கே பதுங்கி இருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித் துள்ளனர். வடமாநிலங்களில் செயல்பட்டு வரும் ஒரு தீவிர வாத அமைப்புடன் சித்திக் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏதாவது ஒன்றில்தான் அவர் தலை மறைவாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

அபுபக்கர் சித்திக்கை பிடிக்க சிறப்பு புலனாய்வு பிரிவில் 10 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த தனிப்படைகள் வடமாநிலங்களில் ஞாயிற்றுக் கிழமையே தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டது.

பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்ந்தது

இதனிடையே கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகள் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. வேலூரில் கடந்த ஜூலை 1ம் தேதி நடந்த இந்து முன்னணி மாநில செயலாளர் சு.வெள்ளையப்பன் கொலை வழக்கில் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு1967- ன்படி, 13, 15, மற்றும் 18 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மாற்றப்பட்டு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

11 நாள் காவலில் பிலால்

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக போலீஸ் பக்ருதீன் வரும் 11ம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார். தற்போது, பிலால் மாலிக்கை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நேற்று ஜே.எம்-3 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்காக, வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பிலால் மாலிக் அழைத்து வரப்பட்டார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சிவக்குமார், 11 நாள் (அக்.17ம் தேதி வரை) காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். காவலில் நீண்டநாள் இருப்பதற்கு மாலிக் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து நடுவில் வரும் 11ம் தேதி அன்று மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் செல்ல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

பத்திரிக்கையாளர்கள் மீது பாய்ச்சல்

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிலால் மாலிக் குறித்து செய்தி சேகரிக்க நிருபர்கள் குவிந்தனர். புகைப்படக்காரர்கள் படங்களை எடுத்து தள்ளினர். இதில் எரிச்சலடைந்த மாலிக் "எவ்வளோ நேரம்டா படம் எடுப்பீங்க, என்ன சினிமாவா காட்டப்போறீங்க? அப்படி இப்படின்னு செய்தியை போட்டு உங்களாலதான்டா என் வாழ்க்கையே நாசமாச்சு" என எரிந்து விழுந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x