Published : 28 Jun 2017 09:06 AM
Last Updated : 28 Jun 2017 09:06 AM

வணிகர்கள் வசதிக்காக ஜிஎஸ்டி வரி செலுத்த எளிய நடைமுறைகள்: வணிக வரித்துறை இணை ஆணையர் தகவல்

ஜிஎஸ்டி வரி செலுத்த எளிய நடைமுறைகள் உருவாக்கப் பட்டிருப்பதால் வணிகர்கள் அச்சப் படத் தேவையில்லை. ஜிஎஸ்டி குறித்து அனைவருக்கும் உரிய முறையில் விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்படும் என்று வணிக வரித்துறை இணை ஆணையர் எம்.பரமேஸ்வரன் உறுதி அளித்தார்.

வணிக வரித்துறை சிந்தாதிரிப் பேட்டை அலுவலகம் சார்பில் ஜிஎஸ்டி குறித்த பயிலரங்கம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட வணிக வரித்துறை இணை ஆணையர் (மத்திய சென்னை) எம்.பரமேஸ்வரன் பேசியதாவது:

பலமுனை வரிக்குப் பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்ற ஒரே வரி விகிதம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. ஜிஎஸ்டி வரி அனைத்து மறைமுக வரிகளையும் உள்ளடக்கியது.

ஜிஎஸ்டியில் அனைத்து நடை முறைகளும் ஆன்-லைனில்தான் செய்ய வேண்டும். இதுவரை வரி செலுத்திய நடைமுறையில் இருந்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு மாறுவது, ஜிஎஸ்டி செலுத்துவற்காகப் பதிவு செய்வது, கணக்கு தாக்கல் செய்வது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெப்ட் மூலம் வரி செலுத்துவது ஆகியன பற்றி வணிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதுதொடர்பாகத்தான் பலருக் கும் அச்சம் இருக்கிறது. அதுபோல அச்சப்படத் தேவையில்லை. எளிய முறையில் ஜிஎஸ்டி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலில் www.gst.gov.in என்ற இணையதளத்தில் வணிகரின் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), அவரது இணையதள முகவரி, செல்போன் எண், டிஜிட்டல் கையெழுத்து, புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும். இந்த விவரங்கள் சரியாக இருந்தால் 3 நாட்களிலேயே பதிவு எண் வழங்கப்படும். தவறு இருந்தால் அதைத் திருத்தி உரிய ஆவணங் களைச் சரிபார்த்த பிறகு ஏழு நாட்களுக்குள் பதிவு எண் வழங் கப்படும். அதிகபட்சம் 17 நாட்களுக் குள் எண் வழங்கப்பட்டுவிடும்.

ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதிக்குள் வரி தொடர்பான கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். புதிதாக ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படுவதால் கணக்குகளைத் தாக்கல் செய்ய செப்டம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் ஆவதற்குள் வணிகர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத் துள்ளோம் என்றார் பரமேஸ்வரன்.

அதைத்தொடர்ந்து வணிக வரித்துறை உதவி ஆணையர் (தணிக்கை) எம்.ராஜேந்திரன் பேசும்போது, ‘‘ஒரு பொருள் எங்கு உற்பத்தியானாலும் அது எங்கு நுகரப்படுகிறதோ அங்குதான் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். ஜிஎஸ்டியை ஆன்-லைனிலில் செலுத்த வேண்டும். வணிக வரி அலுவலங்களுக்கு வரத் தேவையில்லை. ஜிஎஸ்டி செலுத்துவதற்கான பதிவுக்கு கட்டணம் இல்லை. வணிகர்கள் கணக்கு தாக்கல் செய்து ஜிஎஸ்டி செலுத்துவதை வணிக வரித்துறை அதிகாரிகள் கணினி மூலமே கண்காணிப்பார்கள். ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வணிகம் செய்வோருக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு கிடையாது. ரூ.75 லட்சம் வரை வணிகம் செய்பவர்களில் உற்பத்தியாளராக இருந்தால் 1 சதவீதமும், மற்றவர்களுக்கு 2 சதவீதமும், உணவு மற்றும் குளிர்பானங்களுக்கு 5 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

ஏசி மிஷின், அதன் உதிரி பாகங்கள் ஆகியன சரக்காகவும், ஏசியைப் பொருத்துதல் சேவையா கவும் கருதப்படுகிறது. இதில் எதன் மதிப்பு அதிகமாக இருக் கிறதோ அதற்கே வரி விதிக்கப் படும். ஜிஎஸ்டிக்காக பொருட்கள் 97 அட்டவணைகளாக பட்டிய லிடப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குறியீட்டு எண் வழங்கப்பட்டி ருக்கிறது. அந்த குறியீட்டு எண்ணிலே வரி செலுத்த வேண்டும். ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-க்குள் ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து 6 மாதங்கள் கணக்கு தாக்கல் செய்தவர்களே உள்ளீட்டு வரி வரவு (ஐடிசி) கோர முடியும். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய பிறகும் வணிகர்களுக்கு சந்தேகம் வரலாம். அனைத்து சந்தேகங்களுக்கும் வணிக வரித்துறை அலுவலர்கள் உரிய விளக்கம் அளிப்பார்கள் என்றார்.

இந்த பயிலரங்கில், வணிக வரித்துறை சிந்தாதிரிப்பேட்டை அலுவலக உதவி ஆணையர் கி.சித்ரா, வணிக வரி அலுவலர் சி.லலிதாம்பிகை, துணை வணிக வரி அலுவலர் இ.அன்பு விஜயராணி, வணிகர்கள், பட்டய கணக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x