Published : 20 Nov 2013 11:22 AM
Last Updated : 20 Nov 2013 11:22 AM
சென்னையிலுள்ள மெரினா கலங்கரை விளக்கத்தை போன்று பாம்பனில் உள்ள வரலாற்று பிரசித்திப் பெற்ற கலங்கரை விளக்கத்தையும் சுற்றுலாப் பகுதியாக்கவும், கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தொடங்கி தென்குமரி வரையில் பழவேற்காடு, சென்னை மெரினா , மாமல்லபுரம் , பாண்டிச்சேரி ,பரங்கிப்பேட்டை, நாகப்பட்டிணம், கள்ளி மேடு, கோடியக்கரை, அம்மாபட்டிணம், பாசிப்பட்டிணம், பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை , பாண்டியன்தீவு (தூத்துக்குடி மாவட்டம்) மனப்பாடு, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட இடங்களில் பன்னெடுங்காலமாக கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி படுகொலை சம்பவத்திற்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து கலங்கரை விளக்கத்திற்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மகாபலிபுரம், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் கட்டணத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது மெரினா கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலங்கரை விளக்கத்தைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தற்போது பார்வையாளர்கள் கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்று பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் தீவிலுள்ள பாம்பன் கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து சில்லென்று வீசும் கடல் காற்றுடன் மேற்கே பாம்பன் பாலத்தையும், மண்டபத்தையும், கிழக்கே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் கெந்தமாதன ராமர் கோவிலையும், தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், வடக்கே பாக்ஜலசந்தி கடல் பகுதியையும் பாம்பன் தீவின் இயற்கை அழகையும், குருசடை தீவு, சிங்கிள திவு உள்ளிட்ட குட்டி தீவுகளையும் பார்த்து ரசித்திட முடியும்.
பாம்பனில் 1846ம் ஆண்டில் ஐரோப்பியர்களால் நேவல் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இந்த கலங்கரை விளக்கத்திற்கு மீன் எண்ணெய்யும், தாவர எண்ணெயும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1923 ஆம் ஆண்டு பாம்பன் கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பொறுத்தப்பட்டன. இந்த கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தினை கரையில் இருந்து 14 நாட்டிகல் மைல் தொலைவு வரையிலும் பார்க்க முடியும். தற்போது ரேடியோ அலைகள் மூலம் எச்சரிக்கை தகவல்களும் அனுப்பப்படுகின்றன.
பாம்பன் கலங்கரை விளக்ககத்தில் 106 படிகள் உள்ளன. 100 அடி உயரமும் 9 நொடிக்கு ஒருமுறை வெளிச்சத்தை உமிழும் சக்திவாய்ந்த 1000 கேண்டில் சக்தியுள்ள விளக்கை கொண்டது. இதன் சுழல் விளக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு ஒளி தரக் கூடிய ஆற்றல் பெற்றது.
பாம்பனைச் சார்ந்த வரலாற்று ஆர்வலர் தாஹிர் சைபுதீன் கூறுகையில், பிரபல வரலாற்று பயணியான மார்க்கோபோலே தமது பயணக்குறிப்புகளில் பாம்பனில் கிடைக்கக்கூடிய முத்துக்கள் பற்றி சிலாகித்து எழுதியுள்ளார்.
விவேகானந்தர் அமெரிக்கா சிகாகோ நகரில் உரையாற்றிவிட்டு 1897 ஆம் ஆண்டு பாம்பன் துறைமுகத்தில் தான் வந்திறங்க சேதுபதி மன்னர் அவரை வரவேற்றார். அது போல பாம்பனில் இருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அரிசி, மிளகு, கருவாடு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பாம்பன் துறைமுகம் வரலாற்று பிரசித்தி பெற்ற பாம்பனில் 160 ஆண்டுகளுக்கு முன்னரே பாம்பன் கோரிக்கு அருகேயே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இதனை சுற்றுலா ஸ்தமாக ஆகினால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைப்பதும் உறுதி, என்றார்.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெயகாந்தன் கூறியதாவது, மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து இந்திய கடலோரங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும், கடலில் செல்லும் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கலங்கரை விளக்கங்களில் ராடார் கருவிகளை பொருத்தியுள்ளது. பாம்பன் கலங்கரை விளக்கத்திலும் அது போன்ற ராடார் பொருத்தப்பட வேண்டும். பழம்பெருமை வாய்ந்த பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத் தலமாகவும் மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் ராமேஸ்வரம் சுற்றுலாப் பயணிகளை அது வெகுவாகக் கவரும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT