Published : 19 Jun 2017 08:54 AM
Last Updated : 19 Jun 2017 08:54 AM
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 7 முதல் 10 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்தது.
முன்பு 60 நாட்களுக்கு முன் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என இருந்தது. இது 120 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18-ம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்த பண்டிகைக்காக மக்கள் கடந்த 15-ம் தேதி முதல் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அக்டோபர் 16-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட்களை எடுக்க பல்வேறு இடங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மக்கள் அதிகளவில் இருந்தனர்.
முன்பதிவு தொடங்கிய 7 முதல் 10 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்தது. கன்னியா குமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது, காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 100 ஐ நெருங்கியது. ஆனால், இருக்கை வசதி மட்டுமே இருக்கும் வைகை, தூத்துக்குடி லிங்க் விரைவு ரயில்களில் கணிசமான இடங்கள் இருந்தன. குருவாயூர் விரைவு ரயிலிலும் கணிசமான டிக்கெட்கள் இருந்தன.
அக்.17-க்கு இன்று முன்பதிவு
தீபாவளிக்காக ரயில் டிக்கெட்களை இணையதளம் வழியாக பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் ரயில் கவுன்ட்டர்களில் காத்திருந்த பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அக்டோபர் 17-ம் தேதி பயணம் செய்பவர்கள் இன்றும், 18-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் நாளையும் முன்பதிவு செய்யலாம்.
அறிவிப்பு எப்போது?
இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில்களில் அக்டோபர் 16-ம் தேதிக்கான முன்பதிவு முடிந் துள்ளது. டிக்கெட்களை விரைவாக முன்பதிவு செய்ய இணையதளத்தின் தரத்தை உயர்த்தியுள்ளோம். இன்னும் 2 நாட்களுக்கு பிறகு பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம், பெட்டிகள் இணைப்பது போன்றவை குறித்து முடிவு செய்ய விரைவில் உயர் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதன் பிறகு சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT