Last Updated : 01 Dec, 2013 12:00 AM

 

Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

கடலோரக் கிராமங்களில் வெடிகுண்டு வேரூன்ற காரணம் என்ன?

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில கடலோரக் கிராமங்களில் வெடிகுண்டு தயாரிப்பும், தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் கடற்கரை மணல் பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் குறித்து, ‘தி இந்து’ ஏற்கெனவே எச்சரித்தது. இலைமறை காயாக இருந்து வந்த இந்த பயங்கரம், வெடிகுண்டுகள் வெடித்து, அதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலில் மீன்பிடிப்பதில், மீனவர்களிடையே ஏற்படும் மோதலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள், இப்போது ஊருக்குள் இருதரப்பு மோதலுக்கு முக்கிய ஆயுதமாக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல நூற்றாண்டு காலமாகவே, மீனவர்கள் கட்டுமரங்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிகோலும் வகையில், 70 ஆண்டுகளுக்கு முன் விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து வெளிப்பொருத்தும் இயந்திரங்களுடன் ஃபைபர் படகுகள் மீன்பிடிப்புக்கு உதவின. தொழில்நுட்பமும், அறிவியலும் மீன்பிடிப்பில் புகுத்தப்பட்ட அதே நேரத்தில், மீனவர்களிடையிலான மோதல்களும் வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டன.

மோதலின் பரிமாணம்

விசைப்படகு மீனவர்கள், ‘சுருக்கு மடி’ உள்ளிட்ட நவீன மீன்பிடி வலைகளால், மீன் குஞ்சுகள் உள்ளிட்ட அனைத்து மீன்களையும் வாரிச்சுருட்டி கொண்டு சென்றதற்கு, நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதான், பல்வேறு கிராமங்களில் மீனவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதுவதற்கு காரணமானது. பல நேரங்களில் கடலுக்குள் அவர்கள் மோதுவதும், பலர் காயமடைவதும் சர்வசாதாரணமாகவே நிகழ்ந்தன.

அத்தகைய மோதல்களின்போது மீனவர்கள் தங்கள் கட்டுமரங்களிலும், படகுகளில் வைத்திருக்கும் கம்புகள், கட்டைகள், துடுப்புகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனாலும் பெருமளவுக்கு உயிரிழப்பும், கொடுங்காயங்களும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. நாளடைவில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் மோதலின்போது பிரயோகம் செய்யப்பட்டு வந்தன. அதன் பரிணாம வளர்ச்சியாகவே நாட்டு வெடிகுண்டுகளை மீனவர்கள் கையாளத் தொடங்கினர்.

கிராமப்புறங்களில் விழாக் காலங்களில் வாணவேடிக்கை நிகழ்த்த தயாரிக்கப்படும் பட்டாசுகளில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண வெடிமருந்து பொருட்களைகொண்டு, நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு, மீனவர்களுக்கு விற்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாக அத்தகைய வெடிகுண்டுகளை, தாங்களாகவே தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மீனவர்கள் கற்றுத் தேர்ந்தனர்.

வீரியமடைந்த வெடிகுண்டு தயாரிப்பு

தொடக்கத்தில் வெறும் பட்டாசு போன்று, வீரியமில்லாமல் வெடிமருந்துகளுடன், சரல் கல், குண்டூசிகளை வைத்து தயாரிக்கப்பட்ட சாதாரண நாட்டு வெடிகுண்டுகள், நாளடைவில், ஆன்டிமணி, சல்பேட் போன்ற கண் எரிச்சலையும், உடல் அரிப்பையும் ஏற்படுத்தும் வீரியமிக்க வெடிமருந்து பொருட்களால் உருவாக்கப்பட்டன.

இடிந்தகரை சுனாமி காலனியில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட வெடிமருந்து பொருட்கள் அந்த வகையைச் சேர்ந்தவை என வெடிகுண்டு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில், கூத்தன்குழியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மீனவர்கள் மோதும் பிரச்சினை, 1990-ம் ஆண்டுவாக்கிலேயே தொடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து அங்கு சோதனை நடத்தி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில், மணப்பாடு கிராமத்தில் மீனவர்கள் மோதலுக்கு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுவது தற்போது நடத்தப்பட்ட சோதனையின் போது உறுதியாகியிருக்கிறது. உளவுத்துறைக்கும் தெரியும்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கும் திட்டம் தொடங்கும்போதே, வெகு அருகிலுள்ள கூத்தன்குழி கிராமத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும் தெரிந்தே இருந்தது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின்போதும், வெடிகுண்டு விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிந்திருந்தது. இடிந்தகரை மீனவர் கிராமத்தில் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போலீசார் முயற்சி மேற்கொள்ளாமல் விட்டதற்கும், மீனவர்களிடையே வெடிகுண்டு கலாச்சாரம் இருப்பதற்கும் தொடர்பு இருந்தது.இடிந்தகரை சுனாமி காலனியில், கூத்தன்குழி கிராமத்தவரை தங்க வைத்ததால், இப்போது வெடிகுண்டு வெடிப்பும், உயிரிழப்புகளும் நிகழ்ந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் அணு உலைகள் இருக்கும்போது 2 கி.மீ. தொலைவுக்குள் வெடிகுண்டுகள் கையாளப்படுவது குறித்து, ‘தி இந்து’ ஏற்கெனவே எச்சரித்தது.

முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவற்றைக் கைப்பற்றவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவும் முயலாமல், காவல்துறை இருந்தது குறித்து தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஆனால், கடலோரக் கிராமங்களில் தாது மணல் கொள்ளை கும்பல்களால் மோதல்கள் தூண்டிவிடப்பட்டதையும், வெடிகுண்டுகளைத் தயாரிக்க அவர்கள் ஊக்கம் அளித்ததையும் மீனவர் பிரதிநிதிகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

முன்னரே அகற்றியிருக்கலாம்

சுனாமி காலனியில் வெடிகுண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட, திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் கூறியதாவது:

அப்பாவி மக்களை துன்புறுத்தாமல் மீனவர் கிராமங்களில் பதுக்கியிருந்த நாட்டு வெடிகுண்டுகளை முன்பே அகற்றியிருந்தால், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்காது. கூத்தன்குழி கிராமத்தில் இரு தரப்பு மோதலை முடிவுக்கு கொண்டுவந்து, அங்கிருந்து வெளியேறிய மக்களை மீள் குடியமர்த்தியிருக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார் அவர்.

நடவடிக்கை இல்லை

ராதாபுரம் தாலுகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளராக இருந்த ஏ.எம். சத்தியன் கூறும்போது, தாது மணல் பிரச்சினையால்தான் மீனவர்களிடையே வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கியது. மீனவர்கள் மோதலும் வித்தியாசமானதாக மாறியது. மீனவர் கிராமங்களில் பதுக்கிய வெடிமருந்துகளை பறிமுதல் செய்யவும், வெடிமருந்துகள் அங்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x