Last Updated : 28 Jun, 2017 09:59 AM

 

Published : 28 Jun 2017 09:59 AM
Last Updated : 28 Jun 2017 09:59 AM

காடாறு மாசம்.. வீடாறு மாசம்.. கிடைபோடும் கீதாரிகளின் நாடோடி வாழ்க்கை

இயற்கை உரத்தின் அவசியம் குறித்து இன்றைக்கு பலவாறாக பேசுகிறோம். ஆனால், வயல்களிலும் தோட்டங்களிலும் ஆடு, மாடு கிடை போட்டு தமிழகத்தில் காலம் காலமாக இயற்கை உர புரட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் கீதாரிகள்.

மறைந்துவிட்ட மாட்டுக் கிடை

’மாட்டுக் கிடை போட்டால் மறுவருடம் மகசூல்… ஆட்டுக் கிடை போட்டால் அந்த வருடமே மகசூல்.. ‘ என்று கிராமப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. நகரமயமாக்களாலும் விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டதாலும் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து மாடு கிடை போடும் வழக்கம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது.

என்றாலும், ஆடு கிடை போடும் வழக்கம் மட்டும் டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட் டங்களில் இன்றைக்கும் தொடர்கிறது. ஆடு வளர்ப்பை பிரதானமாக வைத்திருக்கும் கீதாரிகள் பெரும்பாலும் லட்சாதிபதிகளாக இருப்பார்கள். ஆனாலும், ஆடுகளையே நம்பி ஜீவனம் நடத்தும் இவர்களின் வாழ்க்கை காடே சரணம் என்றுதான் இருக்கிறது.

கிடைக்கு 300 ரூபாய்

வறட்சியான காலங்களில், ஆடுகளின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு அவற்றை செழிப்பான பகுதியை நோக்கி ஓட்டுகிறார்கள். எந்த ஊரில் தண்ணீரும் மேய்ச்சல் நிலங்களும் கண்ணுக்குத் தெரிகிறதோ அங்குள்ள தோட்டத்திலோ, அறுவடை முடிந்த வயலிலோ கிடை அமைக்கிறார்கள். இந்த மாதத்தில் இந்த ஊருக்குப் போனால் ஆடு மேய்ச்சலுக்கு பிரச்சினை இருக்காது என்பது கீதாரிகளுக்கு துல்லியமாக தெரியும்.

பகலெல்லாம் மேய்ச்சல் காடுகளிலோ, வயல்களிலோ ஆடுகளை கண்ணும் கருத்துமாய் மேயவிட்டு இரவானதும் திறந்தவெளி கிடையில் கொண்டு வந்து அடைக்கிறார்கள். சுமார் 500 ஆடுகள் கொண்ட கிடையை ஒரு வயலில் ஒரு இரவுக்கு அடைக்க அந்த வயலின் உரிமையாளர் 300 ரூபாய் கொடுக்க வேண்டும். இப்படி நாள் கணக்கில் பேசிக் கொண்டு கிடை அமைக்கிறார்கள். கிடையில் அடைக்கப்படும் ஆடுகளின் கழிவுகள் அந்த வயலுக்கு தானாகவே இயற்கை உரமாக செறிவூட்டப்படுகிறது.

என்னதான் வறட்சி வாட்டினாலும் ஆட்டுக் கிடை போடுவதன் மூலம் கீதாரி கள் ஓரளவுக்கு வருமானம் ஈட்டி வரு கிறார்கள். பெரும்பாலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இப்படி ஆடுகளை ஓட்டிக் கொண்டு நாடோடிப் பயணம் செல்கிறார்கள். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆட்டுக் கிடை போட்டிருக்கிறார்கள்.

நாடோடி வாழ்க்கை

கிடை அனுபவம் குறித்து சுசீந்திரம், குறண்டி பகுதியில் கிடை அமைத் துள்ள முருகன் ‘தி இந்து’விடம் பேசினார். “திருநெல்வேலி மாவட்டம் சங்கநேரி தான் நம்ம சொந்த ஊரு. எம் பேரன் முத்துவோட இங்க வந்து நாலு மாசம் ஆகுது. எங்ககிட்ட 400 ஆடு இருக்கு. எங்க பகுதி தண்ணி வெந்நீ இல்லாம வறண்டு போனதால கன்னியாகுமரிக்கு வந்தோம். இப்பத்தாம் எங்க ஊருப்பக்கமும் நாலு தூத்தல் விழுந்துருக்கு.

இந்த ஊருல பயிர் நடவு துவங்கிட்டா அடுத்த ஊருக்கு கிளம்பிடுவோம். பகல் முழுக்க ஆடுகள மேய்ச்சலுக்கு விட்டுட்டு ராத்திரியில கிடை போடுற இடத்துல கொண்டாந்து அடைச்சுருவோம். ஆட்டோட கழிவுகள் தேடுனாலும் கிடைக்காத இயற்கை உரம். அதனால தான் எங்கள வலியக்க கூப்பிட்டு காசு குடுத்து கிடைபோடச் சொல்றாங்க. ஆட்டுக் கழிவுகளை உரமா போட்ட வயல்ல வெளையுற பயிர்களை நோய்நொடி அண்டாது; மகசூலும் நல்லா இருக்கும்.

மேய்ச்சலுக்கு போறப்ப குட்டி ஆடுகளை ஓட்டிட்டுப் போக மாட்டோம். அதுகள கிடையிலேயே விட்டுட்டு போயிடுவோம். அதுகள பாதுகாக்க தனியா பனை ஓலையில் செஞ்ச குடுவை வெச்சுருக்கோம். அதுல குட்டிகளுக்கு தீனியா இலை, தழைகளை போட்டு மூடிருவோம். எங்க சமையல், தூக்கம் எல்லாம் இந்த பகுதியில் தான்.

மழைக்காலங்கள்ல ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கல்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு கம்புல ஒத்தைக் காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.

ஆடு வளர்த்து என்னதான் பணம் காசு வெச்சிருந்தாலும் ஊருல ஒரு நல்லது கெட்டதுன்னா உடனே போயிட முடியாது. சொந்த ஊரு வறண்ட பூமியில இத்தனை ஜீவன்களுக்கும் தீவனம் தேடுறதும் கஷ்டம். அதனால, சொந்த பந்தங்கள விட்டுட்டு கெளம்பி வந்துடுறோம்.

எங்களுக்குள்ள எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் நாங்க வெளிக்காட்டிக்கிறது இல்லை. மொத்தத்துல, காடாறு மாசம்.. வீடாறு மாசம்னு நாடோடி வாழ்க்கைதான் தம்பி எங்க பொழப்பு’’ என்கிறார் முருகன்.

காடாறு மாசம்.. வீடாறு மாசம்..

குமரி மாவட்டத்தைவிட டெல்டா மாவட்டங்களில் ஆட்டுக் கிடைகளுக்கு கிராக்கி அதிகம். இங்கு, முன்பெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வயல்களில் குறிப்பிட்ட கீதாரிகள் மட்டுமே வாடிக்கையாக ஆட்டுக் கிடை போட்டு வந்தார்கள். அந்தக் காலத்தில் பணத்துக்குப் பதிலாக அந்த வயலில் விளையும் நெல்லை கிடைக் கூலியாகக் கொடுத்தார்கள் டெல்டா விவசாயிகள். அதன்படி, கிடை ஒன்றுக்கு ஒரு கலம் (அரை மூட்டை) நெல் தந்திருக்கிறார்கள். பெரும்பாலான கீதாரிகள் இதைக்கூட அந்த ஆண்டு விளைந்த பிறகே வந்து வசூலித்துக் கொண்டு போனார்கள். ஆனால் இப்போது, கை மேல் காசு கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் கிடை நமக்கில்லை.

ஆட்டுக் கிடை விவகாரத்தில் வெளியில் தெரியாத இன்னொரு சோகமும் மறைந்து கிடக்கிறது. பெரும்பாலான கீதாரிகள் தங்களிடம் ஆடுகளை ஓட்டி மேய்ப்பதற்காக ஒன்று அல்லது இரண்டு சிறுவர்களை ஊரிலிருந்தே அழைத்து வருகிறார்கள். இப்படி அழைத்துவரப்படும் சிறுவர்கள் பதினைந்து பதினாறு வயதுக்குள் இருப்பார்கள். ஆண்டுக் கூலியாக இவர்களுக்கு இருபதாயிரம் முப்பதாயிரம் ரூபாய் பேசி அதில் பாதியை முன்பணமாக பெற்றோரிடம் கொடுத்து விட்டு சிறுவர்களை அழைத்து வருகிறார்கள். கிடைப் பயணம் முடிந்து ஊருக்குத் திரும்புகையில் மீதிப் பணத்தை கொடுக்கிறார்கள்.

ஆடுகளை கவனமாக மேய்த்து அவற்றைக் கொண்டு வந்து கிடையில் அடைப்பதோடு மட்டுமல்லாது இரவு நேரத்தில் திருடு போகாமலும் வேறு ஏதும் மிருகங்கள் அண்டாமலும் பாதுகாப்பதும் இந்தச் சிறுவர்களின் பொறுப்புத்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x