Published : 07 Oct 2014 10:00 AM
Last Updated : 07 Oct 2014 10:00 AM

இரவு நேரத்தில் நிற்காமல் வேகமாக செல்லும் மாநகர பஸ்கள்: காத்திருக்கும் பயணிகள் அவதி

சென்னையில் இரவு நேரங்களில் மாநகர பஸ்கள் சில பஸ் நிறுத்தங்களில் நிறுத்தாமலே செல்வதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். பகலில் கண்காணிப்புக் குழு அமைத்து மேற்பார்வையிடுவது போல் இரவிலும் பஸ்களை கண்காணிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகர பஸ்கள் சரியான திட்டமிடல் இல்லாததால், ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல் வரிசையாக வருகின்றன. அதன்பிறகு, சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 18கே, 12பி, 27பி, 6டி, 21ஜி, 21எல், 45பி, 29சி உள்ளிட்ட பல வழித்தடங்களில் இந்த நிலை நீடிக்கிறது.

ஆனால், இரவு 9.30 மணிக்குப் பிறகு, பஸ்களின் இயக்கம் படிப்படியாக குறைக்கப்படுகிறது. அதாவது, தேவைக்கும் குறைவாக பஸ்கள் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் சில மாநகர பஸ்கள், சில பஸ் நிறுத்தங்களில் நிறுத்தாமல் போவது பயணிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக பஸ் பயணிகள் தினேஷ், உதயா, அருண் ஆகியோர் கூறியதாவது:

இரவில் பணி முடித்து செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. ஆனால், பெரும்பாலான வழித்தடங்களில் இரவு 9.30க்கு மேல் பஸ்கள் அதிகளவுக்கு குறைக்கப்படுகிறது. சில பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தாமல் ஓட்டுநர்கள் செல்கின்றனர்.

கடந்த 3-ம் தேதி இரவு 10.25 மணி அளவில் தலைமைச் செயலகம் பஸ் நிறுத்தம் முன்பு பஸ்சுக்காக காத்திருந்தோம். அப்போது, 6டி மாநகர பஸ் ஒன்று வந்தது. அருகில் வந்தபோது, நாங்கள் கையை காட்டினோம்.

ஆனால், அந்த ஓட்டுநர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார். அதன்பிறகு, அரை மணிநேரம் காத்திருந்தோம் 6டி பஸ் வரவேயில்லை.

இதையடுத்து, வேறொரு பஸ்சில் ஏறி பிராட்வேக்கு சென்றோம். அங்கிருந்து வேறொரு பஸ் மூலம் வீட்டுக்கு சென்றோம். இதேபோல், சமீபத்தில் கிண்டியிலும் (எண்.54) இரவில் பஸ் நிற்காமல் சென்ற அனுபவம் ஏற்பட்டது. சில வழித்தட பஸ்கள் கட் சர்வீஸாக இயக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு வழித்தடத்திலும் இறுதியாக இயக்கப்படும் பஸ்களை முறையாக இயக்க வேண்டும். இதற்காக மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பகலில் பஸ் நிறுத்தங்களைக் கண்காணிப்பதைப் போல் இரவு நேரங்களிலும் பஸ்கள் நின்று செல்கின்றனவா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பயணிகளின் புகார் குறித்து நிர்வாகத்துக்கு ஆதாரத்தோடு அனுப்பிவைத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இரவு நேரத்தில் மக்களின் தேவையை கருதி முக்கியமான வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பயணிகள் பஸ் தேவை குறித்து எங்களிடம் விண்ணப்பித்தால், ஆய்வு செய்து பஸ்கள் இயக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x