Published : 30 Oct 2013 08:49 PM
Last Updated : 30 Oct 2013 08:49 PM

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; சுகாதாரத்துறை அமைச்சரானார் சி.விஜயபாஸ்கர்

தமிழக அமைச்சரவை 10-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. சுகாகாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், நாளை பதவி ஏற்கிறார். அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



அதிமுக அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை 9 முறை மாற்றப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை முடிவடைந்த ஒரு மணி நேரத்தில் அமைச்சரவை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 'விராலிமலை தொகுதி உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரைக்கு ஆளுநர் ரோசய்யா அனுமதி வழங்கியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கருக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பொறுப்பை வகித்து வரும் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் இது பத்தாவது மாற்றம் ஆகும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த வைகைச் செல்வன், கடந்த ஜூன் 17-ம் தேதி நீக்கப்பட்டார். அதன்பிறகு, அத்துறையை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியின் மகனான விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ். முடித்தவர். இவர், கடந்த 2001-ல் முதல்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டார். கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர், கலகலப்பாக பேசுவார். நகைச்சுவையுடன் கதைகளைக் கூறி எதிர்க்கட்சியினரை விமர்சிப்பார். இந்தக் கூட்டத் தொடரில் செவ்வாய்க்கிழமையன்று இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்ததால் திமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x