தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது என திமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது மட்டுமின்றி, ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு வரிபோட்டு மக்களை வாட்டி வதைக்கும் தமிழக அரசை கண்டிப்பதாகவும் நிறைவேற்றப்பட்டது.
திமுக மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாநில மகளிர் அணித் தலைவர் நூர்ஜகான்பேகம் தலைமை தாங்கினார். கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆசிட் வீச்சு, கழுத்தறுப்பு என விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. சட்டம் ஒழுங்கை சீர்குலைய வைத்திருக்கும் இந்த ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு வரிகளை போட்டு மக்களை வாட்டி வதைப்பது மட்டுமின்றி, பேருந்து கட்டணம், மின் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை, காய்கறி விலை, எண்ணெய் பொருட்கள் விலை ஆகியவற்றின் விலையை உயர்த்தி ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிர்வாக சீர்கேடுகளைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தவது, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நாளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, கழக மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி, பிரச்சாரக் குழு சார்பில் தமிழகத்தில் 4 மண்டலங்களாக பிரித்து பெரிய அளவில் மகளிர் பாசறைக் கூட்டங்கள் நடத்த கட்சித் தலைவரின் அனுமதியை கோருவது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
WRITE A COMMENT