Published : 02 Dec 2013 07:10 PM
Last Updated : 02 Dec 2013 07:10 PM
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிடக்கூடாது என்று 'கழிப்பறை' உதாரணத்துடன் பேசிய இலங்கை அமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் "சென்னையில் நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைத்து தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தரப்படும் என்று கூறியிருந்தார்.
சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. சிதம்பரத்தின் பேச்சு பற்றி பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆளும் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான சுசில் பிரேம்ஜெயந்த், இலங்கைப் பிரச்சினையில் தலையிட இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை இணைப்பது குறித்து பேச எவரும் பேச முடியாது என்று கூறியிருக்கிறார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சமான வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் இணைப்பு குறித்து கூட இந்தியா பேசக்கூடாது என்று கூறியிருப்பதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எந்த விதமான அதிகாரமும் தரப் படாது என்பதை இலங்கை அமைச்சர் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் அனைவரும் பயன்படுத்த கழிப்பறைகள் உள்ளன. இந்தியாவில் தான் கழிப்பறைகள் கூட இல்லை. முதலில் அந்தப் பிரச்சினையை அவர்கள் தீர்க்கட்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும். இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடக் கூடாது என்ற இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். இந்தியாவை இலங்கை அவமதிப்பது காலம்காலமாகவே நடந்து வருகிறது.
கடந்த 65 ஆண்டுகளில் இந்தியாவிடமிருந்து இலங்கை ஏராளமான உதவிகளைப் பெற்றுக் கொண்டபோதிலும் ஒருபோதும் நமக்கு விசுவாசமாக இருந்ததில்லை. இனியும் இந்தியாவுக்கு இலங்கை ஆதரவாக இருக்காது.
அதனால், இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதற்கும், தமிழீழம் அமைப்பது குறித்து உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT