Published : 28 Jun 2017 08:30 AM
Last Updated : 28 Jun 2017 08:30 AM
கால்நடைத் துறையில் 1,577 கால்நடை உதவியாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரால் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் வரவேற்கப்பட்டது. மேலும் இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு கடந்த மே 10-ம் தேதி நடத்தப்பட்டது. அதில் நானும் கலந்துகொண்டேன். ஆனால், இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை.
இந்தப் பணிக்கு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, நியாயமான முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோரை நியமித்து நேர்மையாக இந்தத் தேர்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, ‘‘கால்நடை உதவியாளர்களுக்கான நியமனம் மாவட்ட அளவில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது மாநில அளவில் தவறுதலாக இந்த நியமனம் நடைபெறவிருந்தது. எனவே, தேர்வு நடைமுறையில் தவறு நடந்துள்ளதால் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து கால்நடை துறைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் புதிதாக தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT