Published : 25 Dec 2013 09:14 AM
Last Updated : 25 Dec 2013 09:14 AM
கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து டன்னுக்கு ரூ. 3,500/- என நிர்ணயிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யும்போது தமிழக அரசு, விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலை நிர்வாகம் ஆகிய முத்தரப்புக் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டு விலை நிர்ணயம் செய்வதுதான் வழக்கமான நடைமுறையாகும்.
ஆனால், நடப்பு ஆண்டில் முத்தரப்புக் கூட்டம் நடத்தாமலேயே தான்தோன்றித்தனமாக தமிழக முதல்வர் கரும்பு கொள்முதல் விலையை அறிவித்திருப்பது ஏற்கக் கூடியதல்ல.
விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்ந்து கவலை தரக் கூடியதாகவே இருக்கின்றன. குறிப்பாக, கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. விவசாய இடுபொருள்கள் விலை உயர்வு, இரசாயன உரங்களின் தாறுமாறான விலையேற்றம், அதிகரித்து வரும் டீசல் விலையினால் வாகன வாடகை உயர்வு, வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் கூலிச் செலவு ஆகியவற்றால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு நியமித்த எம்.எஸ். சாமிநாதன் குழு கரும்பு உற்பத்திச் செலவுடன் மேலும் 50 ரூ சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதன்படி விவசாயிகள் கரும்பு டன் ஒன்றுக்கு வெட்டுக் கூலி, வாகன வாடகை சேர்க்காமல் வயல் விலையாக ரூ. 3,500/- நிர்ணயம் செய்யக் கோரிவரும் நிலையில் கடந்த ஆண்டை விடக் கூடுதலாக வெறும் வெறும் ரூ. 300/- மட்டுமே வழங்கி தமிழக அரசு கண்துடைப்பு அறிவிப்பு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
கடந்த ஆண்டு மத்திய அரசு ஆதாய விலையாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 1,700/- நிர்ணயம் செய்தபோது அதனுடன் ரூ. 650/- சேர்த்து ரூ. 2,350/- என்று கொள்முதல் விலையை அறிவித்தது தமிழக அரசு.
நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஒரு டன்னுக்கு ரூ. 2,100/- என நிர்ணயம் செய்துள்ளபோது கடந்த ஆண்டை விட ரூ. 100/- குறைத்து வெறும் ரூ. 550/- சேர்த்து ஆக மொத்தம் ஒரு டன்னுக்கு ரூ. 2,650/- என்று தமிழக அரசு அறிவித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். மத்திய, மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்துகின்றன.
சர்க்கரை ஆலைகளுக்கு 7,500 கோடி ரூபாயைக் கடனாக வழங்க முன்வந்துள்ள மத்திய அரசு, கரும்பு விவசாயிகளின் குறைகளைப் போக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒரு டன் கரும்பின் மூலம் 100 கிலோ சர்க்கரை, 150 யூனிட் மின்சாரம் மற்றும் 35 லிட்டர் எரிசாராயம், இதோடன்றி மேலும் பல கழிவுப் பொருள்களின் மூலம் சர்க்கரை ஆலைகள் ரூ. 35,000/- இலாபம் ஈட்டுகின்றன. ஆனால், இதிலிருந்து 10 ரூ தொகையைக் கூட விவசாயிகளுக்கு வழங்கிட சர்க்கரை ஆலைகள் மறுத்து வருகின்றன.
கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்க விவசாயிகளுக்கு உரிமம் வழங்கவும் மத்திய அரசு அனுமதி மறுக்கின்றது. மேலும், உள்நாட்டில் கரும்பு விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளபோது வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வஞ்சகத்தால் கரும்பு விவசாயிகளின் துயரம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
எனவே, தமிழக அரசு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையை மறுபரிசீலனை செய்து நடப்பு ஆண்டில் கரும்பு ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் ரூ. 3,500/- என விலைநிர்ணயம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT