Published : 06 Dec 2013 10:38 AM
Last Updated : 06 Dec 2013 10:38 AM
சென்னையில் இயங்கும் 201 அம்மா உணவகங்களில், 286 நாட்களில் 20 கோடியே 53 லட்சத்து, 37 ஆயிரத்து, 92 ரூபாய்க்கு உணவுப் பொருட்கள் விற்பனையாகி உள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், மண்டலத்துக்கு ஒன்று என, 15 மலிவு விலை உணவகங்களை கடந்த பிப்ரவரி 19-ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அம்மா உணவகம் என்று பெயரிடப்பட்ட இந்த உணவகங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.
தற்போது 201 அம்மா உணவகங்கள் சென்னையில் செயல்படுகின்றன. இந்த அம்மா உணவகங்களில் காலையில், ஒரு இட்லி 1 ரூபாய்க் கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், மதியம் தயிர் சாதம் 3 ரூபாய்க் கும், சாம்பார், எலுமிச்சை, கரு வேப்பிலை சாதங்கள் ஒவ்வொன்றும் 5 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு ஒன்பது மாதங் களைக் கடந்துவிட்ட நிலையில், அதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: அம்மா உணவகங்களில், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல், நவம்பர் 30-ம் தேதி வரையான, 286 நாட்களில், 20 கோடியே 53 லட்சத்து, 37 ஆயிரத்து,92 ரூபாய்க்கு உணவுப் பொருட்கள் விற்பனையாகி உள்ளன.
இதில், 6 கோடியே, 97 லட்சத்து, 99 ஆயிரத்து, 780 இட்லிகளும், 55 லட்சத்து 48 ஆயிரத்து, 698 பொங்கலும், ஒரு கோடியே 24 லட்சத்து, 27 ஆயிரத்து, 590 சாம்பார் சாதமும், 68 லட்சத்து, 90 ஆயிரத்து, 92 தயிர் சாதமும் விற்பனையாகியுள்ளன.
மேலும், 27 லட்சத்து, 24 ஆயிரத்து, 168 லெமன் சாதமும், 22 லட்சத்து, 73 ஆயிரம் கருவேப் பிலை சாதமும் விற்பனையாகி உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 6.97 கோடி இட்லி, 55.48 லட்சம் பொங்கல், 1.24 கோடி சாம்பார் சாதம், 68.90 லட்சம் தயிர் சாதம் விற்பனையாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT