தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “வங்கக் கடலின் தென் பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை ஆகிய கடலோர மாவட்டங்களில் கன மழையும் மற்றும் பல இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த தென்மேற்கு பருவ மழை இயல்பாக பெய்துள்ளது. சராசரியை விட ஒரு சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது (33 சதவீதம்). தமிழகத்துக்கு அதிக மழையை (66 சதவீதம்) தரக்கூடிய வடகிழக்கு பருவ மழை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
தமிழகத்தில் திங்கள் காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழையளவு: சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ., மீனம்பாக்கத்தில் 7 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 6 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது,” என்றார் ரமணன்.
WRITE A COMMENT