Last Updated : 29 Sep, 2013 08:58 AM

 

Published : 29 Sep 2013 08:58 AM
Last Updated : 29 Sep 2013 08:58 AM

"என்னது... சிவாஜி செத்துட்டாரா?"

முதல்முறை அந்தச் செய்தியைப் படித்தபோது பிரதமரே கொஞ்சம் திடுக்கிட்டுப்போய் இருப்பார். மோடி கொடுத்த பேட்டியைத்தான் ராகுல் பெயரில் ஊடகங்கள் தவறாகப் போட்டுவிட்டனவோ என்று.

"அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் கிழித்து எறிய வேண்டும்" - என்ன ஒரு காட்டம்?!

கடந்த ஜூலை 10-ம் தேதி அன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் முக்கியமான அம்சத்தை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியை உடனடியாகப் பறிக்க வகைசெய்யும் உத்தரவு இது.

மேலும், சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்கிறது. இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே துரிதமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது மன்மோகன் சிங் அரசு. தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தத் தீர்ப்பைச் செயலிழக்கச் செய்யும் சட்ட மசோதாவை உருவாக்கி, மழைக்காலக் கூட்டத் தொடரின்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பியது. அந்தக் குழுவின் ஆய்வு நிலுவையில் இருக்கும்போதே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

இந்தச் சட்டத் திருத்தத்தை செப்டம்பர் 6-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், "சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம். சில நேரங்களில் நீதிமன்றங்கள் தவறு செய்கின்றன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் செய்த தவறை நாம் சரிசெய்கிறோம்" என்றார். அமெரிக்கா செல்லும் முன் செப்டம்பர் 24-ம் தேதி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டிய பிரதமர் மன்மோகன் சிங் இந்த அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றார்.

இடதுசாரிகளும் பா.ஜ.க-வும் இந்த அவசரச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், "மசோதா மீதான நிலைக் குழுவின் ஆய்வு நிலுவையில் உள்ளபோதே, இப்படி ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவது சட்ட விரோதம்" என்ற முறையீட்டோடு, குடியரசுத் தலைவரை செப்டம்பர் 26-ம் தேதி சந்தித்தது பா.ஜ.க. இதைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் பிரணாப் முகர்ஜி விளக்கம் கேட்ட நிலையில்தான் செப்டம்பர் 27 அன்று இப்படிப் பொங்கி எழுந்திருக்கிறார் ராகுல்.

ஜூலை 10-க்கும் செப்டம்பர் 27-க்கும் இடைப்பட்ட 78 நாட்களில் ராகுல் எங்கே இருந்தார்? என்னவானார்? இந்தச் சட்டத் திருத்தத்தில் மன்மோகன் சிங் இவ்வளவு அவசரம் காட்டக் காரணமும் தன் சொந்தக் கட்சிக்காரரின் விவகாரம்தான்.

மருத்துவக் கல்விக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் முறைகேட்டில் ஈடுபட்டதை செப்டம்பர் 19-ம் தேதி உறுதிசெய்தது சி.பி.ஐ. நீதிமன்றம். அக்டோபர் 1-ம் தேதி அவருக்குத் தண்டனை அறிவிக்கப்படவிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டால், இந்திய அரசியல் வரலாற்றில் முறைகேட்டில் சிக்கியதற்காகப் பதவியை இழந்த முதல் அரசியல்வாதி என்று காங்கிரஸின் ரஷீத் மசூதின் பெயர் இடம்பெறும். அதைத் தவிர்க்கத்தான் இவ்வளவு துடிப்போடு செயல்பட்டது சிங் அரசு.

ராகுலுக்கு இது தெரியாதா? பெரிய வேடிக்கை, "அரசியல் சமரசத்துக்காகவே இதுபோன்ற அவசரச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் நாட்டில் உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டுமானால், இத்தகைய சின்னஞ்சிறு சமரசங்களை நாம் செய்துகொள்ளக் கூடாது" என்று தன்னுடைய எதிர்ப்புக்கு ஊழலைக் காரணமாக ராகுல் சொல்லியிருப்பது.

ஊழலைப் பற்றிப் பேச காங்கிரஸுக்கோ, இந்த அரசுக்கோ, ராகுலுக்கோ தார்மிகரீதியாக என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள், "அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் கொடுத்தார்கள்" என்ற குற்றச்சாட்டோடு, கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சியில் தொடங்கி, "ராணுவக் கொள்முதலில் நடக்கும் ஊழலுக்கு ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்" என்று நாட்டின் தரைப் படைத் தளபதியே பேட்டி கொடுத்தது வரை நடந்தது மன்மோகன் சிங் ஆட்சியில்தானே?

பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதானே 'இஸ்ரோ' ரூ.4.5 லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கும் நிலக்கரித் துறை ரூ.10 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாயின? நாடே அதிர்ந்த ரூ.1.76 லட்சம் கோடி முறைகேட்டில் சிக்கிய ஆ.ராசா சில நாட்களுக்கு முன்கூடக் கேட்டிருக்கிறார்: "2007-08-ல் '2ஜி'அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருந்தால், ஏன் 2009-ல் திரும்பவும் எனக்கே பிரதமர் தொலைத்தொடர்புத் துறையை ஒதுக்கினார்?" என்று. பதில் அளிக்க ஆள் இல்லை.

ஒருகாலத்தில், "குடும்பத்துக்காகச் சம்பாதிப்பதுதான் என்னுடைய பெரிய சவால். நான் என்னுடைய கைவினைப் பொருட்களை வாங்குபவர்களைத் தேடி வீடுவீடாகச் செல்கிறேன். பல இடங்களில் என்னை வெளியே தள்ளியிருக்கிறார்கள். தளராமல் போராடுகிறேன்" என்று பேட்டியளித்த ராபர்ட் வதேரா, ஓராண்டுக்குள் ஆறு நிறுவனங்கள் தொடங்கும் அளவுக்கு வளர்ந்ததும் 12 நிறுவனங்களுக்கு இயக்குநரானதும் இந்த ஆட்சியில்தானே? ரூ.300 கோடி அளவுக்கு ராபர்ட் வதேரா மீது முறைகேடு குற்றச்சாட்டு வந்தபோது இதே பிரதமர் இந்தச் சங்கதிகள் எல்லாம் வெளியே வரக் காரணமாக இருக்கும் தகவல் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகப் பகிரங்கமாகப் புலம்பினாரே... நினைவிருக்கிறதா?

அட, ராகுல் இப்படிப் பொங்குவதற்கு முதல் நாள், அவருடைய நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான தொழிலதிபர் நவீன் ஜிண்டாலை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது... அரசுக்குப் பொய்யான தவலை அளித்து, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்ற வழக்கில். ராகுல் எங்கே இருந்தார்? என்னவானார்? ராகுலின் திடீர் ஆவேசம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் புகழ்பெற்ற வசனத்தை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறது. அந்தப் படத்தில் குறுகிய கால மறதி நோயால் பாதிக்கப்பட்டு நினைவு திரும்பும் காட்சியில் விஜய் சேதுபதி கேட்பார்: "என்னது... சிவாஜி செத்துட்டாரா?"

தொடர்புக்கு: writersamas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x