Published : 30 Jun 2017 09:45 AM
Last Updated : 30 Jun 2017 09:45 AM
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா ரயில் பெட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. இது எதிர்பாராத விபத்து என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு பாசஞ்சர் ரயில், நேற்று முன்தினம் இரவு வந்தது. பின்னர் இந்த ரயில் மூன்றாவது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு இந்த ரயில் திருப்பதிக்கு புறப்படும். இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு 7-வது பெட்டி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் பெட்டி முழுவதும் தீயில் கருகியது. தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே துறையினர் கூறியதாவது: மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிறுத்தப்பட்ட ரயிலில் மின்சாரம் தடை செய்யப்படும். பேட்டரி மூலமும் தீ பரவ வாய்ப்பில்லை. இந்த தீவிபத்து ரயில் நிலையங்களில் சுற்றி திரியும் பிச்சைக்காரர்களால் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. இரவு நேரங்களில் நிறுத்தப்படும் ரயில்களில் சில பெட்டிகள் திறந்திருப்பின் அதில் ஏறி இவர்கள் உறங்குவது வழக்கம். அப்படி உறங்க சென்றவர்கள் அணைக்காமல் வீசப்பட்ட தீக்குச்சி ரெக்ஸின் சீட்டில் பட்டு தீ பிடித்திருக்க வாய்ப்புண்டு. இந்த தீ விபத்து குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
இதனிடையே திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் நேற்று காலை விழுப்புரம் வந்து எரிந்த ரயில் பெட்டியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது விபத்துதான். தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. தீயை அணைக்க ரயில்வே துறையில் வசதியில்லை. தீயை அணைக்க மாநில அரசின் உதவியையே நாடுகிறோம். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த ரயில்வே துறையிடம் நிதி இல்லை. அரசு நிதி ஒதுக்கீடு செய்தால்தான் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்படும் என்றார். ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் சோமசேகர், ரயில் நிலைய மேலாளர் ராஜன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT