Published : 22 Nov 2013 12:57 PM
Last Updated : 22 Nov 2013 12:57 PM
தொகுதி வளர்ச்சிக்காக முதல்வரைச் சந்தித்த தேமுதிக எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜன் தொகுதி பக்கமே தலைகாட்ட முடியல என மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக மாநிலப் பொருளாளராகவும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகத் தேர்வானார்.
அதன்பின் விஜயகாந்துடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், 26.10.2012-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை 'தொகுதி வளர்ச்சிக்காக' சந்தித்துப் பேசி தன்னை அதிமுக அனுதாபியாக்கிக் கொண்டார். இவருடன் மேலும் சில எம்எல்ஏக்களும் முதல்வரைச் சந்தித்தனர். இதனால் சுந்தர்ராஜனை தலைவராகக்கொண்டு போட்டி தேமுதிக உருவாக்கப்படலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது.
இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்துக்கு எம்எல்ஏ சுந்தர்ராஜன் வியாழக்கிழமை திடீரென வந்தார். அவரை வரவேற்ற மேயர் வி.வி ராஜன் செல்லப்பா, தொகுதிப் பிரச்சினை குறித்து பேசுமாறு அழைப்பு விடுத்தார். அதுதான் தாமதம். அடுத்த நிமிடமே ஆதங்கத்தைப் பொரிந்து தள்ளினார் சுந்தர்ராஜன்.
'நான் சொல்வதை யாரும் குற்றமாகக் கருத வேண்டாம். முதல்வரைச் சந்தித்தபோது நான் கேட்டதற்கிணங்க மதுரைக்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் இதுவரை எனது தொகுதியிலுள்ள வாய்க்கால்கள்கூட தூர்வாரப்படவில்லை.
அதிகாரிகளிடம் கெஞ்சிப் பார்த்தேன்; கொஞ்சிப் பார்த்தேன். ஆனால் சரியான பதிலை யாரும் சொல்லவில்லை. ஏதாவது காரணங்களைச் சொல்லிக் கொண்டுள்ளனர். இதனால் என்னால் தொகுதி பக்கமே தலைகாட்ட முடியல.
பாதாளச் சாக்கடைப் பணிகள் பாதியில் கிடக்கின்றன. பல சாலைகள் மோசமாக உள்ளன. இதுபற்றி கவுன்சிலர்களிடம்கூட கூறிப் பார்த்தேன். அவர்களும் நடைபெறவில்லை. பல பகுதிகளில் தண்ணீரில் சாக்கடை கலந்து வருகிறது. பொன்னகரம் பகுதி மக்கள் அடிக்கடி புகார் கூறுகின்றனர்.
எனது தொகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனது தம்பி மகள்கூட டெங்குவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், ஒருவர்கூட அங்கு வந்து டெங்கு பற்றி விசாரிக்கவில்லை. சொல்வதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அந்த மருத்துவமனைக்குச் சென்று பார்க்கலாம். அதேபோல் வடக்குமாசி வீதியில் உள்ள ஸ்கேன் சென்டர் மிகவும் மோசமாக உள்ளது. பிரசவ மருத்துவமனை இடிந்துவிழும் நிலையில் உள்ளது.
நான் எவ்வளவோ சொல்லியும் அதை சரிசெய்யவில்லை. ஒரு கட்சியைச் சேர்ந்த நண்பர்கள் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு 'எங்க தொகுதி எம்எல்ஏவைக் காணோம்' என போஸ்டர் அடிக்கப் போவதாகக் கூறினர். அவர்களிடம் 'அதை நானே அடித்துத் தருகிறேன். வேண்டுமானால் ஒட்டிக்கொள்ளுங்கள் எனக் கூறி விட்டேன்.
இங்குள்ள சில அதிகாரிகள் முதல்வர் பெயரைக் கெடுக்கும் வகையில், மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் பல பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டு வருகின்றனர். அவர்களைக் களையெடுத்து நல்ல அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனக் கொட்டித் தீர்த்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் கேட்டதற்கு, 'எம்எல்ஏ சுந்தர்ராஜன் இப்போது மட்டுமல்ல. எப்போதுமே குறைகளைச் சுட்டிக்காட்டும் குணமுடையவர். மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு, மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தந்து வருகிறது. எனினும் அவரது தொகுதியில் இருப்பதாகக் கூறிய குறைகளை களைய உடனே நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தொகுதி பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முதல்வரை சந்தித்ததாகக் கூறியவர், தற்போது தொகுதிக்குள்ளேயே தலைகாட்ட முடியவில்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT