Published : 12 Oct 2014 09:52 AM
Last Updated : 12 Oct 2014 09:52 AM
பேருந்தில் இருந்து விழுந்ததால் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் இதயம், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹைதர் அலி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி குல்பஹார். இவர்களது மூத்த மகள் ரிஹானா (21), பி.காம். முடித்துவிட்டு, வங்கித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். தேர்வு சம்பந்தமாக ஆடிட்டரை பார்ப்பதற்காக கடந்த 8-ம் தேதி தனியார் பேருந்தில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால், ரிஹானா நின்றபடியே பயணம் செய்துள்ளார். புதுச்சேரிக்கு முன்பாக வளைவு ஒன்றில் பேருந்து வேகமாக திரும்பியுள்ளது. நிலைதடுமாறிய பயணிகள் பேருந்துக்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக, படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார் ரிஹானா.
கீழே விழுந்த ரிஹானாவின் தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது. மயக்கம் அடைந்த அவரை சக பயணிகள் உடனடியாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக அன்று இரவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், தலையில் அடி பலமாக பட்டிருந்ததால் ரிஹானாவின் உடல்நலம்குன்றத் தொடங்கியது. நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார்.
மருத்துவர்கள் இத்தகவலைத் தெரிவித்ததும், ரிஹானாவின் பெற்றோர் கதறி அழுதனர். மகளைப் பறிகொடுத்த அந்த சோகமான நேரத்திலும், அவரது உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் ரிஹானாவின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம், இதயம், நுரையீரல், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் அனைத்தும் தேவையானவர்களுக்கு பொருத்தப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT