Published : 01 Dec 2013 05:56 PM
Last Updated : 01 Dec 2013 05:56 PM

இலங்கை இனப் படுகொலையில் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு: இல.கணேசன்

இலங்கை இனப் படுகொலையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "சென்னையில் நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பா.ஜ.க.தான் காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம். இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது தர மறுத்ததோடு, இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தர மறுத்தவர் வாஜ்பாய்.

காமன்வெல்த் மாநாடு வெறும் நாடகம். இதனால் பயன்பெறப் போவது ராஜபக்சேதான். இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால், காமன்வெல்த் மாநாட்டை பா.ஜ.க. எதிர்த்தது. இங்கிலாந்து பிரதமர் கேமரூனுக்கு இருந்த அடிப்படை தைரியம்கூட மன்மோகன் சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ராஜபக்சேவுக்கு நூறு சதவீத பொறுப்பு என்றால், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 50 சதவீத பொறுப்பு உண்டு. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணர வேண்டும். உண்மைகளை மறைப்பதற்காக, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதை சிதம்பரம் தவிர்க்க வேண்டும்" என்றார் இல.கணேசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x